Published : 15 Aug 2022 01:26 PM
Last Updated : 15 Aug 2022 01:26 PM

இந்தியா @ 75: சுகாதாரப் பணியாளர்களின் மகத்தான பங்களிப்பு

ஒரு நாட்டில் வசிக்கும் மக்களுக்கு மிக மிக அடிப்படை உரிமை சுகாதாரம். இன்றும் முறையான சுகாதார வசதி இல்லாத பல நாடுகள் இருக்கும் நிலையில், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்த 75 ஆண்டுகளில் சுகாதாரத் துறையில் பல மடங்கு முன்னேறியுள்ளது. ஒரு காலத்தில் உலகை உலுக்கிக் கொண்டு இருந்த போலியோ தொடங்கி மலேரியா, டெங்கு, பிளேக், காலரா, அம்மை என்று பல நோய்களை இந்தியா எப்படி கட்டுப்படுத்தியது என்று பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.

உலகில் இன்னும் போலியோ பாதிப்பு இருந்து வரும் நிலையில், இந்தியாவில் இருந்து போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது மட்டுமல்லாமல் காசநோய், சர்க்கரை நோய், கொசுக்களால் பரவும் நோய், உயர் ரத்த அழுத்தம், எச்ஐவி உள்ளிட்ட பல நோய்களை கட்டுப்படுத்தும் திட்டங்கள் இந்தியாவில் தற்போது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரு காலத்தில் வீட்டில் பிரசவசம் பார்த்துக் கொண்டு இருந்த நிலை மாறி தற்போது 99.99 % பிரசவங்கள் மருத்துவமனையில்தான் நடைபெறுகின்றன. இதன் காரணமாக குழந்தை இறப்பு பெரிய அளவில் குறைக்கப்பட்டது உள்ளிட்ட பல சாதனைகளை செய்தவர்கள் இந்தியாவின் சுகாதாரப் பணியாளர்கள்தான்.

இந்தியாவில் தற்போது சுகாதாரத் துறை வேகமாக முன்னேறி வருவதற்கும் பல தொற்றுகளை கட்டுபடுத்துவதில் வெற்றிகரகமாக செயல்படுவதற்கும் மகத்தான பங்களிப்பு அளித்தது சுகாதாரப் பணியாளர்கள்தான்.

மருத்துவர்களின் எண்ணிக்கை 1951-ம் ஆண்டு வெறும் 61 ஆயிரத்து 840 மட்டும்தான். அதற்கு அடுத்த இந்த 75 ஆண்டு காலத்தில் மருத்துவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து 1961-ம் ஆண்டு 83 ஆயிரத்து 756 மருத்துவர்கள், 1971-ம் ஆண்டு 1 லட்சத்து 51 ஆயிரம் மருத்துவர்கள், 1981-ம் ஆண்டு 2 லட்சத்து 68 ஆயிரம், 1992-ம் ஆண்டு 3 லட்சத்து 95 ஆயிரம், 2003-ம் ஆண்டு 6 லட்சத்து 5 ஆயிரம், 2012-ம் ஆண்டு 8 லட்சத்து 83 ஆயிரம் என்று உயர்ந்து தற்போது இந்தியாவில் சுமார் 13 லட்சம் மருத்துவர்கள் உள்ளனர்.

இந்த மருத்துவர்களுக்கு உதவியாக இருந்த செவிலியர்களின் எண்ணிக்கை 1951-ம் ஆண்டு 16 ஆயிரம், 1961-ம் ஆண்டு 35 ஆயிரம், 1971-ம் ஆண்டு 80 ஆயிரம், 1981-ம் ஆண்டு 1 லட்சத்து 54 ஆயிரம், 1992-ம் ஆண்டு 3 லட்சத்து 85 ஆயிரம், 2003-ம் ஆண்டு 8 லட்சத்து 32 ஆயிரம், 2012-ம் ஆண்டு 21 லட்சத்து 24 ஆயிரம் என்று தற்போது 33 லட்சத்து 41 ஆயிரம் செவிலியர்கள் இந்தியாவின் சுகாதாரத் துறையைத் தாங்கிப் பிடித்து வருகின்றனர்.

உலக சுகாதார நிறுவனம் 1000 மக்களுக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்று கூறியுள்ள நிலையில், இந்தியாவில் 834 மக்களுக்கு ஒரு மருத்துவரும், கிட்டத்தட்ட 2 செலிவியர்களும் உள்ளனர். இது, 75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய சாதனையாகும்.

எவ்வளவு மருத்து கட்டமைப்பு ஏற்படுத்தி இருந்தாலும் மருத்துவப் பணியாளர்கள் இல்லாவிடில் அந்தக் கட்டமைப்புகளை பயன்படுத்த முடியாது என்பதை உணர்ந்துதான் இந்தியாவில் மருத்துவ கட்டமைப்புக்கு இணையாக மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டுக் கொண்டே இருந்தது.

இந்த மருத்துவப் பணியாளர்கள்தான் நகர்புறம் தொடங்கி குக்கிராமங்கள் வரை அனைத்து மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றியதன் காரணமாதான் இந்தியா சுகாதாரத் துறையில் அளவுக்கு மேம்பட்ட நிலையை அடைந்து இருக்கிறது என்றால், அது மிகையல்ல.

இதற்கு சிறந்த உதாரணம்தான் சமீபத்தில் கரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய காரணத்திற்காக ஆஷா பணியாளர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் அளித்த விருது.

ஒரு காலத்தில் வசதி படைத்தவர்களுக்கும் கிடைத்து வந்த மருத்துவப் படிப்பை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க செய்தவர்களுக்கும், தனது வீட்டில் இருந்து ஒரு மருத்துவப் பணியாளர்களை உருவாக்கிய குடும்பங்களுக்கும், உருவாக்க உள்ள குடும்பங்களுக்கும் இந்த 75 வது சுதந்திர தினத்தில் நன்றியை உரித்தாக்குவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x