Published : 08 Aug 2022 04:44 AM
Last Updated : 08 Aug 2022 04:44 AM

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதி திரட்டிய டெல்லி பொறியியல் மாணவர் கைது

புதுடெல்லி: பிஹார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் மொஷின் அகமது. டெல்லியில் உள்ள ஜமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வருகிறார். டெல்லி பத்லா ஹவுஸ் பகுதியில் தங்கியுள்ளார். இங்கு தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தி மொஷின் அகமதுவை கைது செய்தனர்.

இவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் தீவிர உறுப்பினராக உள்ளார். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்காக நிதி திரட்டி, கிரிப்டோ கரன்சி மூலம் சிரியாவுக்கு அனுப்பி வந்ததாக என்ஐஏ கூறியுள்ளது. இதனால் அவர் கைது செய்யப்பட்டார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ள னர். மொஷின் அகமதுவின் தந்தை ரயில்வேயில் பணியாற்றுகிறார். இவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர். இது குறித்து ஒரு சகோதரி கூறுகையில், ‘‘எனது சகோதரர் நிதி திரட்டியிருந்தால், அவரிடம் ஏராளமாக பணம் இருந்திருக்கும். சில நாட்களுக்கு முன்பு கூட படிப்பு செலவுக்காக அவர் ரூ.4,000 கேட்டு எனக்கு தகவல் அனுப்பினார். அவர் சமூக சேவையில் ஈடுபடுபவர். கரோனா ஊரடங்கு காலத்தில் அவர் நன்கொடை வசூலித்து ஏழைகளுக்கு உணவு வழங்கினார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் முழுவதும் பொய். இதை எதிர்த்து நாங்கள் நீதிமன்றத்தில் மனு செய்வோம். எனது சகோதரர் எளிமையானவர், அப்பாவி’’ என்றார்.

மொஷின் தாயார் கூறுகையில், ‘‘எனது மகன் டெல்லிக்கு கடந்த ஜூலை மாதம்தான் வந்தான். தனது நண்பர்கள் மற்றும் உறவினருடன் அவன் தங்கியிருந்தான்’’ என்று தெரிவித்தார்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவான நடவடிக்கையில் ஈடுபட்டதாக, மொஷின் அகமது மீது என்ஐஏ கடந்த ஜூன் 25-ம் தேதி வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து அவர் கைது செய் யப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x