Published : 30 Jul 2022 10:12 AM
Last Updated : 30 Jul 2022 10:12 AM

அழுக்கான மருத்துவமனை படுக்கையில் டீனை படுக்கவைத்த பஞ்சாப் அமைச்சர்: குவியும் கண்டனங்கள்

சண்டிகர்: அழுக்கான மருத்துவமனை படுக்கையில் டீனை படுக்கவைத்த பஞ்சாப் மாநில அமைச்சர் சேத்தன் சிங் ஜோரம்ஜாவுக்கு கண்டனங்கள் குவிகின்றன.

பஞ்சாப் சுகாதார அமைச்சர் சேத்தன் சிங் ஜோரம்ஜா. இவர் நேற்று ஃபரீத் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த படுக்கைகள் சுகாதாரமற்றதாக இருப்பதாக அமைச்சர் குற்றஞ்சாட்டினார். அப்போது அவர் திடீரென தன்னுடன் இருந்த துணை வேந்தர் மருத்துவர் ராஜ் பகதூரை நோயாளியின் படுக்கையில் படுக்க நிர்பந்தித்தார். அந்தப் படுக்கை அழுக்காக இருந்தது. அமைச்சரின் நிர்பந்தத்தால் டீன் சில விநாடிகள் படுக்கையில் முதுகை சாய்த்துவிட்டு எழுந்தார். இந்தக் காட்சிகள் தொலைக்காட்சி செய்திகளில் வெளியாகின. இதனையடுத்து துணை வேந்தர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தச் சம்பவத்தை சுட்டிக் காட்டி பஞ்சாப் சுகாதார அமைச்சரையும், ஆம் ஆத்மி கட்சியையும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மருத்துவர் ராஜ் பகதூர், ஒரு தேர்ந்து முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர். இந்நிலையில் மருத்துவமனை சுகாதாரத்தைப் பற்றி கேள்வி எழுப்பிய அமைச்சர் டீனை அழுக்கான படுக்கையில் படுக்குமாறு வற்புறுத்தியது கண்டனத்துக்குரிய அவமானப்படுத்தும் செயல் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பவன் குமார் பன்சால் தனது ட்விட்டரில், "மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் இதுபோன்ற அடாவடி அமைச்சர்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை. அவர் நேரடியாக வேந்தருக்கு பதில் சொல்ல மட்டுமே பொறுப்பு கொண்டிருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

பாஜகவின் மன்ஜீந்தர் சிங் பதிவு செய்த ட்வீட்டில், "சுகாதார அமைச்சரின் செயல் அருவருப்பானது. அவர் பல்கலைக்கழக துணை வேந்தரை அவமதித்துவிட்டார். ஒரு கல்வி அறிவு இல்லாத அமைச்சர் எப்படி நடந்துகொள்வார் என்பதை நிரூபித்துவிட்டார். இதுபோன்ற மாற்றத்தைத்தான் அரவிந்த் கேஜ்ரிவால் கொண்டுவர விரும்பினாரா" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாபில் ஆளுங் கட்சியை வீழ்த்தி அமோக வெற்றியை பதிவு செய்தது ஆம் ஆத்மி கட்சி. அக்கட்சியின் பகவந்த் மான் பஞ்சாப் மாநில முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், பஞ்சாப் சுகாதார அமைச்சரின் செயல் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x