Published : 23 Jul 2022 06:29 AM
Last Updated : 23 Jul 2022 06:29 AM

குடியரசுத் தலைவர் தேர்தல் | கட்சி மாறி வாக்களித்த 126 எம்எல்ஏ.க்கள் - தமிழகத்தில் ஒரு செல்லாத வாக்கு பதிவு

புதுடெல்லி: கடந்த 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் தேர்தலில் வாக்களித்தனர். டெல்லியில் நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு 6,76,803 வாக்கு மதிப்பு கிடைத்தது. அவர் 64 சதவீத வாக்குகளைப் பெற்றார்.எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு 3,80,177 வாக்கு மதிப்பு கிடைத்தது. அவர் 36 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

இந்த சூழலில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 126 எம்எல்ஏ.க்கள், 17 எம்.பி.க்கள் கட்சி மாறி திரவுபதி முர்வுக்கு வாக்களித்திருப்பது தெரிய வந்துள்ளது.

பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 523 எம்பிக்கள் உள்ளனர். அதை தாண்டி முர்வுக்கு 540 எம்பிக்கள் வாக்களித்துள்ளனர். இதன்படி எதிர்க்கட்சிகளை சேர்ந்த 17 எம்.பி.க்கள் கட்சி மாறி வாக்களித்தது உறுதியாகி உள்ளது.

அதிகபட்சமாக அசாமில் 22

எம்எல்ஏக்களை பொறுத்த வரை அசாம் மாநிலத்தில் மிக அதிகபட்சமாக 22 எம்எல்ஏ.க்கள் கட்சி மாறி வாக்கை செலுத்தியுள்ளனர். இதில் பெரும்பாலானோர் காங்கிரஸை சேர்ந்தவர்கள்.

மத்திய பிரதேசத்தில் 19, மகாராஷ்டிராவில் 16, உத்தர பிரதேசத்தில் 12, குஜராத்தில் 10, ஜார்க்கண்டில் 10, மேகாலயாவில் 7, பிஹாரில் 6, சத்தீஸ்கரில் 6, ராஜஸ்தானில் 5, கோவாவில் 4 என நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 126 எம்எல்ஏக்கள் கட்சி மாறி முர்முவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதன் காரணமாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைமை விசாரணை நடத்தி வருகிறது. அந்த கட்சியின் மூத்த தலைவர் சுக்ராம் ரத்வா கூறும்போது, "குடியரசுத் தலைவர் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்பி, எம்எல்ஏக்களை கண்டறிவது கடினம். எனினும் யார் யாரெல்லாம் கட்சிக்கு துரோகம் செய்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதில் கண்டறியப்படும் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் ஒரு வாக்கு

குடியரசுத் தலைவர் தேர்தலில் 53 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 15 பேர் எம்பிக்கள் ஆவர். பஞ்சாப், மத்திய பிரதேசம், டெல்லி, மேற்கு வங்கம், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், அசாம் மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் செல்லாத வாக்குகள் பதிவாகி உள்ளன. தமிழகத்தில் ஒரு செல்லாத வாக்கு பதிவானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x