Published : 19 Jul 2022 02:12 PM
Last Updated : 19 Jul 2022 02:12 PM

அடுத்தது சிவசேனா எம்.பி.க்கள்; ஷிண்டே அணிக்கு தாவ தயார்: தடுத்து நிறுத்த போராடும் உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா எம்எல்ஏக்களில் பெரும்பாலானோர் உத்தவ் தாக்கரேவை எதிர்த்து ஷிண்டே தரப்புக்கு தாவிய நிலையில் அடுத்ததாக அக்கட்சி எம்.பி.க்களும் அணி மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவர்களை தடுத்து நிறுத்த உத்தவ் தாக்கரே தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த மாதம் 29-ம் தேதி கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக, சிவசேனா அதிருப்தி அணி இணைந்து கடந்த 30-ம் தேதி மாநிலத்தில் புதிய அரசை அமைத்தன. சட்டப்பேரவை பேரவைத் தலைவர் தேர்வு நடந்தது. இதில் பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. ஆளும் பாஜக கூட்டணி 164 வாக்குகள் பெற்றது. சிவசேனாவின் 55 எம்எல்ஏக்களில் 40-க்கும் மேற்பட்டோர் ஷிண்டே அணியில் உள்ளனர்.

இந்தநிலையில் சிவசேனா எம்.பி.க்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர ஷிண்டே பிரிவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். சிவசேனா எம்.பி.க்கள் 12 பேர் ஏக்நாத் ஷிண்டேவுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் மக்களவையில் தனி குழுவாக இயங்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிரா அமைச்சரவை குறித்து பாஜக தலைமையுடன் கலந்துரையாடுவதற்காக முதல்வர் ஷிண்டே டெல்லி சென்றபோதே இந்த விவகாரம் பேசி முடிக்கப்பட்டதாக தெரிகிறது.

சிவசேனா மும்பை தெற்கு மத்திய தொகுதி எம்.பி. ராகுல் ஷெவாலே தலைமையிலான அணியினர் தனி சிவசேனா குழுவாக இயங்குவதாக சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதினர். தொடர்ந்து ஷிண்டே குழுவினர் தலைமைக் கொறடாவையும் நியமிக்கவும் ஆலோசித்து வருகின்றனர். யவத்மால் எம்.பி. பாவனா கவ்லி கொறாடா பொறுப்புக்கு தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அவர் சமீபத்தில் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ராஜன் விச்சாரேவை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நியமித்துள்ளார். ஆனால் சபாநாயகர் இந்த விவகாரத்தில் அதிகாரப்பூர்வமாக எந்த முடிவையும் எடுக்கவில்லை.

மக்களவையில் சிவசேனாவுக்கு 19 எம்.பி.க்கள் உள்ளனர். இந்த 19 எம்.பி.க்களில் 12 பேர் திங்களன்று ஏக்நாத் ஷிண்டேவை ஆன்லைன் மூலம் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து 12 எம்.பி.க்களுக்கும் சிறப்பு ஒய்-பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் எம்.பி.க்கள் ஷிண்டே அணிக்கு மாறுவதை தடுத்து நிறுத்த உத்தவ் தாக்கரே தரப்பும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் இளைஞர் அணித் தலைவர் ஆதித்ய தாக்கரே தலைமையில் நேற்று நடைபெற்றது.

எம்.பி.க்கள் தனிக் குழுவாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சபாநாயகர் முடிவு செய்த பிறகே சிவசேனாவின் அதிகாரப்பூர்வ சின்னத்திற்கு ஷிண்டே பிரிவினர் உரிமை கோருவார்கள் எனத் தெரிகிறது.

உத்தவ் தாக்கரே மற்றும் ஷிண்டே ஆகியோர் தொடர்ந்துள்ள வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முக்கியமாக கருதப்படுகிறது. இதன் மூலமே சிவசேனாவின் தலைவர் யார் என்ற கேள்விக்கு சட்டரீதியாக தீர்வுகாண முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x