Published : 08 Jul 2022 09:17 PM
Last Updated : 08 Jul 2022 09:17 PM

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு இந்தியா ஒருநாள் துக்கம் அனுசரிப்பு

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே-யுடன் பிரதமர் மோடி | கோப்புப்படம்

புதுடெல்லி: ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே வெள்ளிக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தியா முழுவதும் நாளை (சனிக்கிழமை) ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனை முன்னிட்டு நாடு முழுவதும் தொடர்ச்சியாக தேசிய கொடி பறக்கும் அனைத்து கட்டிடங்களிலும் நாளை தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நாளை நடைபெறாது.

முன்னதாக, ஜப்பான் நாடாளுமன்ற மேலவைக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறும் நிலையில், நரா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அபே பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் அவரை சுட்டார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், அவர் சிகிச்சைப் பலனின்றி மரணம் அடைந்தார்.

பிரதமர் மோடி இரங்கல்:

ஷின்சோ அபே-யின் சோகமான மரணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அதிர்ச்சியும், துயரமும் தெரிவித்துள்ளார். அவரது மறைவு குறித்து மோடி தனது ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:

“எனது இனிய நண்பர்களில் ஒருவரான ஷின்சோ அபேயின் சோகமான மரணத்தால் வார்த்தைகளால் கூற முடியாத அதிர்ச்சியையும், துயரத்தையும் நான் கொண்டுள்ளேன். அவர் உலகளாவிய அரசியல் பிரமுகராக உயர்ந்திருந்தவர், ஒப்பற்ற தலைவர், குறிப்பிடத்தகுந்த நிர்வாகி. ஜப்பானையும், உலகத்தையும் சிறந்த இடத்தில் வைப்பதற்கு தனது வாழ்க்கையை அவர் அர்ப்பணித்துக்கொண்டவர்.

பல ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு அபே உடன் நட்பு இருந்தது. குஜராத் முதலமைச்சராக எனது பதவிக்காலத்தில் அவரை நான் அறிந்திருந்தேன். நான் பிரதமரான பிறகும் எங்களின் நட்பு தொடர்ந்தது. பொருளாதாரம் மற்றும் உலக நடவடிக்கைகள் குறித்த அவரின் நுட்பமான கருத்துக்கள் எனக்கு எப்போதும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் எனது ஜப்பான் பயணத்தின் போது அபேயை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பையும், பல விஷயங்களை விவாதிக்கும் வாய்ப்பையும் நான் பெற்றிருந்தேன். எப்போதும் அவர், சமயோசிதம் உள்ளவராகவும், நுட்பமான அறிவு மிக்கவராகவும் இருந்தவர். இதுவே எங்களின் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நான் சிறிதும் நினைக்கவில்லை. அவரது குடும்பத்திற்கும், ஜப்பான் மக்களுக்கும் எனது நெஞ்சம் நெகிழ்ந்த இரங்கல்கள்.

இந்தியா-ஜப்பான் உறவுகளை சிறப்பு உத்திகள் வகுத்தல் மற்றும் உலகளாவிய கூட்டாளிகள் நிலைக்கு உயர்த்தியதில் அவர் ஆழமான பங்களிப்பை செய்துள்ளார். இன்று ஒட்டுமொத்த இந்தியாவும், ஜப்பானுடன் துக்கம் அனுசரிக்கிறது. இந்த சிரமமான தருணத்தில் எங்களின் ஜப்பானிய சகோதரர்கள், சகோதரிகளுடன் ஒருமைப்பாட்டுடன் நாங்கள் இருக்கிறோம்.

முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே-வுக்கு மிகுந்த மரியாதை தெரிவிக்கும் வகையில் நாளை சனிக்கிழமை (ஜூலை 9) அன்று ஒருநாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும்" என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x