Published : 30 Jun 2022 04:26 AM
Last Updated : 30 Jun 2022 04:26 AM

இறுதிக்கட்டத்தை நெருங்கும் மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் - கோவா திரும்பினர் அதிருப்தி எம்எல்ஏக்கள்

மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து, முதல்வர் பதவியிலிருந்து உத்தவ் தாக்கரே விலகினார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி (மகா விகாஸ் அகாடி) ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார். இந்நிலையில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 38 எம்எல்ஏக்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். அவர்கள் அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தனர். சில சுயேச்சை எம்எல்ஏக்களும் அவர்களுடன் உள்ளனர். மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் இணைந்து புதிய ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் ஷிண்டே வலியுறுத்தி வருகிறார்.

இதனிடையே, ஷிண்டே உள்ளிட்ட 16 அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு சட்டப்பேரவை துணைத்தலைவர் நர்ஹரி ஜிர்வால் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது வரும் ஜூலை 12-ம் தேதி வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட்டது.

இந்நிலையில், ஜூன் 30-ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு சட்டப்பேரவையின் ஒருநாள் சிறப்பு கூட்டத்தைக் கூட்டுமாறு பேரவைச் செயலாளர் ராஜேந்திர பாகவத்துக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி நேற்று உத்தரவிட்டார்.

மேலும் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்தில், ‘சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், பாஜக எம்எல்ஏக்களுடன் என்னை சந்தித்து ஒரு கடிதத்தை அளித்தார். அதில், முதல்வர் பெரும்பான்மையை இழந்துவிட்டதால், உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். 7 சுயேச்சை எம்எல்ஏக்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர்.

எனவே, ஜூன் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, ஆளுநரின் உத்தரவை எதிர்த்து ஆளும் சிவசேனா கட்சியின் தலைமை கொறடா சுனில் பிரபு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜே.பி.பர்தி வாலா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன்பு நேற்று மாலை 5 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “மகாராஷ்டிர அரசு பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் ஒரே ஒரு நாள் அவகாசம் வழங்கி உள்ளார். 16 அதிருப்தி எம்எல்ஏக்களின் தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஆளுநரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதாடினார்.

ஆளுநர் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடும்போது, “பெரும்பான்மையை நிரூபிக்க குதிரை பேரம் நடக்க வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல் 39 எம்எல்ஏக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே, இதை புறக்கணிக்க முடியாது” என்றார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என்ற ஆளுநரின் உத்தரவில் தலையிட முடியாது என தெரிவித்தனர். ஆளுநரின் உத்தரவுப்படி முதல்வர் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும். அதேநேரம் இதன் முடிவுகள் 16 எம்எல்ஏக்களின் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்புக்கு உட்பட்டது என்று தெரிவித்தனர்.

நீதிமன்ற தீர்ப்பு வந்த நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:

மகா விகாஸ் கூட்டணி அரசு அமைய ஆதரவளித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நன்றி. கடந்த இரண்டரை ஆண்டுகளாக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு நன்றி. எங்கள் கட்சியினரே எனக்கு துரோகம் செய்துவிட்டனர். இதனால்தான் இதுபோன்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

பாலாசாஹிப் கனவை நனவாக்கும் வகையில் அவுரங்காபாத், உஸ்மனாபாத் நகரங்களின் பெயரை மாற்றி உள்ளோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். முதல்வர் பதவியிலிருந்து விலகுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முதல்வர் பதவியிலிருந்து உத்தவ் தாக்கரே விலகியதால் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கான அவசியம் இருக்காது. புதிய அரசு அமைக்க பாஜக உரிமைகோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவா திரும்பினர்

கடந்த ஒரு வாரமாக குவாஹாட்டியில் தங்கியிருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் நேற்று மாலை தனி விமானம் மூலம் கோவா மாநிலம் சென்றடைந்தனர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x