Published : 28 Jun 2022 05:47 AM
Last Updated : 28 Jun 2022 05:47 AM

ஜூலை 12 வரை அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை - அமைச்சர்களின் துறைகள் அதிரடியாக பறிப்பு

உத்தவ் தாக்கரே

புதுடெல்லி: தகுதி நீக்க நோட்டீஸ் தொடர்பாக வரும் ஜூலை 12 வரை அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனாவுக்கு 56, தேசியவாத காங்கிரஸுக்கு 53, காங்கிரஸுக்கு 44 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. பெரும்பான்மைக்கு 144 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் ஆளும் கூட்டணிக்கு 153 எம்எல்ஏக்கள் இருந்தனர். எதிர்க்கட்சியான பாஜகவுக்கு 106, அதன் கூட்டணி கட்சிகளுக்கு 7 என பாஜக கூட்டணியில் 113 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இந்த சூழலில் கடந்த 20-ம் தேதி சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் கட்சி தலைமைக்கு எதிராக திடீரென போர்க்கொடி உயர்த்தினர். தற்போது அசாமின் குவாஹாட்டியில் அவர்கள் முகாமிட்டுள்ளனர். ஷிண்டே அணியில் 39 சிவசேனா எம்எல்ஏக்கள், சுயேச்சை எம்எல்ஏக்கள் உட்பட சுமார் 50 எம்எல்ஏக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஷிண்டே அணியைச் சேர்ந்த 16 சிவசேனா எம்எல்ஏக்களுக்கு மகாராஷ்டிர சட்டப்பேரவை துணைத் தலைவர் நரஹரி ஷிர்வால் நேற்று முன்தினம் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பினார். ஜூன் 27-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதில் அளிக்க நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து ஷிண்டே அணியைச் சேர்ந்த16 எம்எல்ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் சூரிய காந்த், பர்டிவாலா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

ஷிண்டே அணி தரப்பில் மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷண் கவுல் வாதாடியதாவது:

தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்ப பேரவை துணைத் தலைவருக்கு அதிகாரம் கிடையாது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. 40 எம்எல்ஏக்களை, மாடுகளை போல வெட்டுவோம் என்று மிரட்டல் விடுக்கப்படுகிறது. எம்எல்ஏக்களின் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குடும்பத்தினர் தொடர்ந்து மிரட்டப்படுகின்றனர்.

எம்எல்ஏக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே மும்பை உயர் நீதிமன்றத்தை நாடாமல் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம். சிவசேனா சட்டப்பேரவைத் தலைவராக அஜய் சவுத்ரி, சிவசேனா தலைமை கொறாடாவாக சுனில் பிரபு ஆகியோர் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நியமனம் செல்லாது. இவ்வாறு அவர் வாதிட்டார்.

மகாராஷ்டிர அரசு தரப்பு வாதம்

சிவசேனா சட்டப்பேரவைத் தலைவர் அஜய் சவுத்ரி, சிவசேனா கொறடா சுனில் பிரபு சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியும், மகாராஷ்டிர சட்டப்பேரவை துணைத் தலைவர் நரஹரி ஷிர்வால் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவாணும், மகாராஷ்டிர அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத்தும் ஆஜராகினர்.

அபிஷேக் சிங்வி, ராஜீவ் தவாண் கூறும்போது, "தகுதி நீக்க நோட்டீஸை அனுப்ப சட்டப்பேரவை துணைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. சட்டப்பூர்வமாகவே சிவசேனா பேரவைத் தலைவர், கொறடா நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று வாதிட்டனர்.

ஜூலை 11-க்கு ஒத்திவைப்பு

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் சூரிய காந்த், பர்டிவாலா கூறியதாவது:

தகுதி நீக்க நோட்டீஸ் தொடர்பாக வரும் ஜூலை 12-ம் தேதி வரை அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. ஜூலை 12-க்குள் அவர்கள் தகுதி நீக்க நோட்டீஸுக்கு பதில் அளிக்க வேண்டும்.

இந்த வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர சட்டப்பேரவை துணைத் தலைவர் நரஹரி ஷிர்வால், அஜய் சவுத்ரி, சுனில் பிரபு மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அனைத்து தரப்பினரும் 5 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும் பாதுகாப்பு கோரப்படும் 39 எம்எல்ஏக்களின் சொத்துகள், குடும்ப உறுப்பினர்களுக்கு மகாராஷ்டிர அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்ய அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையில், போர்க்கொடி தூக்கியுள்ள சிவசேனா அதிருப்தி அமைச்சர்களின் துறைகளை பறித்து, முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்தத் துறைகள் தற்போதுள்ள மற்ற அமைச்சர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போது சிவசேனா சார்பில் முதல்வர் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்யா தாக்கரே, அனில் பராப், சுபாஷ் தேசாய் ஆகிய 4 பேர் மட்டுமே கேபினட் அமைச்சர்களாக உள்ளனர்.

மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு

மும்பை உயர் நீதிமன்றத்தில் உப்தல் பாபுராவ் என்பவர் நேற்று பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில், "ஏக்நாத் ஷிண்டே மற்றும் 38 சிவசேனா எம்எல்ஏக்கள் மக்கள் பணியை துறந்து அசாமில் முகாமிட்டுள்ளனர். அவர்களுக்காக ரூ.3,000 கோடி வரை செலவிடப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. விவசாயிகள் உரத் தட்டுப்பாடு பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். அடிப்படை தேவைகளுக்காக தொகுதி மக்கள் காத்திருக்கின்றனர். எனவே அசாமில் முகாமிட்டுள்ள 39 எம்எல்ஏக்களும் மாநிலம் திரும்ப உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி தீபன்கர் தத்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீடிக்கும் மகாராஷ்டிர அரசியல் குழப்பத்துக்கு உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு, திருப்புமுனை தீர்வாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x