Last Updated : 13 May, 2016 11:22 AM

 

Published : 13 May 2016 11:22 AM
Last Updated : 13 May 2016 11:22 AM

சோமாலியாவுடன் ஒப்பிட்டு பேசிய மோடி மீது வழக்கு தொடர உம்மன் சாண்டி பரிசீலனை

சோமாலியாவுடன் கேரளாவை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் தான் தெரிவித்த கருத்தைத் திரும்பப் பெறாத பிரதமர் நரேந்திர மோடி மீது வழக்கு தொடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

எர்ணாகுளம் பத்திரிகையாளர் மன்றம் சார்பில் கொச்சியில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் சாண்டி பேசும்போது, “நாட்டின் பிரதமரான மோடி, சோமாலியாவுடன்கேரளாவை ஒப்பிட்டுப் பேசி மாநில மக்களை அவமதித்துள்ளார். ஊடக செய்தியைக் குறிப்பிட்டு அவர் பேசியதில் உண்மை இல்லை. பிரதமராக உள்ள அவர், ஊடகங்களில் வெளியான தகவல் உண்மையா என சரிபார்த்த பிறகு பேசியிருக்க வேண்டும். எனவே, பிரதமர் மீது வழக்கு தொடுப்பது குறித்தும் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்வது குறித்தும் பரிசீலித்து வருகிறோம்.

முன்னதாக, நேற்று காலையில் சாண்டி தனது முகநூல் பக்கத்தில், “பிரதமர் நரேந்திர மோடி தனது சர்ச்சைக்குரிய கருத்து பற்றி எதுவும் சொல்லாமல் மவுனம் சாதித்து வருகிறார். கேரள மக்கள் எதிர்பார்ப்பது அவரது மவுனத்தை அல்ல. பிரதமர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்” என பதிவிட்டிருந்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, “கேரளாவில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் குழந்தை இறப்பு விகிதம் சோமாலியாவைவிட மோசமாக உள்ளது” என்றார்.

இவரது இந்தக் கருத்துக்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக ட்விட்டர் சமூக இணையதளத்திலும் மோடிக்கு எதிராக பிரச்சாரம் வேகமாக பரவியது.

இதையடுத்து, உம்மன் சாண்டி பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், “உண்மைக்கு மாறான கருத்தை தெரிவித்து மாநில மக்களை தாங்கள் அவமதித்து விட்டீர்கள். எனவே இந்தக் கருத்தைத் திரும்பப் பெறுவதுடன் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று எழுதி இருந்தார். ஆனால் பிரதமர் மோடி இதுவரை மவுனமாகவே இருந்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x