Published : 20 Jun 2022 04:45 PM
Last Updated : 20 Jun 2022 04:45 PM

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட கோபால கிருஷ்ண காந்தியும் மறுப்பு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சரத்பவார், பரூக் அப்துல்லாவை தொடர்ந்து கோபால கிருஷ்ண காந்தி இன்று நிராகரித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையில், 17 எதிர்க்கட்சிகள் டெல்லியில் கடந்த 15-ம் தேதி ஆலோசனை நடத்தின.

அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை வேட்பாளராக நிறுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அவர் தனக்கு விருப்பம் இல்லை என தெரிவித்துவிட்டார். இதையடுத்து, தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு கட்சித் தலைவர்களும் பரூக் அப்துல்லாவுடன் ஆலோசனை நடத்தினர்.

ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட விரும்பவில்லை என பரூக் அப்துல்லா கூறி விட்டார். இதனைத் தொடர்ந்து அடுத்த வாய்ப்பாக மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. 77 வயதான இவர் காந்தியடிகளின் பேரன் ஆவார்.

இதற்கு முன்பு கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியுற்றார்.

இந்தநிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி இன்று நிராகரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

‘‘குடியரசுத் தலைவர் என்ற உயரிய பதவிக்கு வரவிருக்கும் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக தேர்வு செய்ய விரும்பி மரியாதைக்குரிய பல எதிர்க்கட்சித் தலைவர்கள் எனக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆனால் இந்த விஷயத்தை ஆழமாகப் பரிசீலித்தேன்.

எதிர்க்கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்யும்போது தேசிய ஒருமித்த கருத்தையும், எதிர்க்கட்சி ஒற்றுமைக்கு அப்பாற்பட்டு தேசிய சூழலையும் உருவாக்கும் ஒருவராக அவர் இருக்க வேண்டும். என்னை விட இதை சிறப்பாகச் செய்யும் மற்றவர்கள் இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். எனவே இந்த தேர்தலில் நான் போட்டியிட விரும்பவில்லை’’ எனக் கூறினார்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் வேட்பாளரை முடிவு செய்ய மும்பையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நாளை நடைபெறுகிறது. 21-ம் தேதி, பிற்பகல் 2.30 மணி அளவில் நாடாளுமன்ற வளாகத்தில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற இருக்கிறது.

இந்தக் கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 17 கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கூட்டத்திற்கு முன்பாக கோபாலகிருஷ்ண காந்தி போட்டியிட மறுப்பு தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜியும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x