Published : 19 Jun 2022 05:57 AM
Last Updated : 19 Jun 2022 05:57 AM

குஜராத்தில் ரூ.21,000 கோடி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

வடோதரா: 'குஜராத்தின் கவுரவம்' என்ற பெயரில் அந்த மாநில பாஜக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் வடோதராவில் நேற்று நடைபெற்ற குஜராத் கவுரவ திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது ரூ.21,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

வடோதராவில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள குந்தேலா கிராமத்தில் குஜராத் மத்திய பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேண ரூ.800 கோடி மதிப்பில் "முதல்வரின் தாய்மை" திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி அங்கன்வாடி மையங்களில் கர்ப்பிணிகளுக்கு மாதந்தோறும் 2 கிலோ கொண்டை கடலை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட உள்ளன.

மேலும் ரூ.16,000 கோடி மதிப்பில் பல்வேறு ரயில்வே திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார், புதிய ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இன்றைய நாள், தாயை வணங்கும் தினமாகும். காலையில் என்னை பெற்றெடுத்த தாயை வணங்கினேன். அடுத்ததாக பகவதி மலையில் ஸ்ரீ காளிகா தாயை வணங்கி ஆசி பெற்றேன். காளிகா தாயின் ஆசியால் ரூ.21,000 கோடி மதிப்பில் பல திட்டங்களை தொடங்கிவைத்து, மேலும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன்.

ஆன்மிகவாதிகளின் நகரமாக வடோதரா புகழ்பெற்று விளங்குகிறது. சுவாமி விவேகானந்தர், அரவிந்தர், வினோபா பாவே, அம்பேத்கர் போன்றோர் வடோதரா நகரால் ஈர்க்கப்பட்டனர். கடந்த 2014-ல் வடோதரா தெய்வங்கள் மற்றும் காசி விஸ்வநாதரின் அருளால் நான் பிரதமராக பதவியேற்றேன்.

கடந்த 8 ஆண்டுகளில் பெண்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு அயராது பாடுபட்டு வருகிறது. குறிப்பாக கர்ப்பிணிகள், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு தாய் நலமாக இருந்தால் மட்டுமே, அந்த குடும்பம் வளமாக இருக்கும். உஜ்வாலா திட்டத்தில் பெண்களுக்கு இலவசமாக சமையல் காஸ் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. தூய்மை இந்தியா திட்டத்தில் பெண்களுக்கு கழிப்பறை கட்டிக் கொடுக்கப்படுகிறது.

குஜராத்தின் அனைத்து நிலைகளிலும் பெண்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கிராமங்களில் பெண்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படுகின்றன.

பெரும்பாலான குடும்பங்களில் நிதி சார்ந்த முடிவுகளை பெண்களே எடுக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு பெண்களுக்கு ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கப்படுகிறது. முத்ரா யோஜ்னா திட்டத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது.

குஜராத்தில் ஏழைகளுக்காக 7.5 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டிருக்கிறது. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த 4.5 லட்சம் குடும்பங்கள் வீடுகள் கட்ட நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. குஜராத் மத்திய பல்கலைக்கழகம், ரயில் பல்கலைக்கழகம், பிர்ஸா முண்டா பழங்குடி பல்கலைக்கழகம் ஆகியவற்றால் குஜராத்தின் கல்வித் துறைஅபார வளர்ச்சி பெறும். அதோடு குஜராத்தின் தொழில் துறையும் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. மாநிலத்தின் உள்கட்டமைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

புனரமைக்கப்பட்ட காளி கோயில் திறப்பு

குஜராத்தின் பஞ்சமகால் மாவட்டம் பகவதி மலையில் 11-ம் நூற்றாண்டை சேர்ந்த ஸ்ரீ காளி கோயில் உள்ளது. கடந்த 15-ம் நூற்றாண்டில் முகலாய மன்னர்கள், கோயிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு தர்காவை கட்டினர்.

பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் இந்தக் கோயிலை புனரமைக்கும் பணி சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. முதல்கட்டமாக புனரமைக்கப்பட்ட கோயில் வளாகத்தை பிரதமர் மோடி கடந்த ஏப்ரலில் தொடங்கி வைத்தார். இரண்டாம் கட்டமாக கோயிலின் அடிவார விரிவாக்கம், 3 அடுக்கு வளாகம், கோபுரம் ஆகியவை கட்டப்பட்டன. புனரமைக்கப்பட்ட கோயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். அப்போது கோயிலின் கோபுர உச்சியில் காவி கொடியை அவர் ஏற்றினார்.

அங்கு பிரதமர் மோடி பேசும்போது, "அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்படுகிறது. வாரணாசியில் விஸ்வநாதர் கோயில் புனரமைக்கப்பட்டிருக்கிறது. சோமநாதர் கோயிலை கட்டி எழுப்பியது போன்று, இன்று ஸ்ரீ காளி கோயிலை கட்டியெழுப்பி திறந்துள்ளோம். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளான பிறகும் ஸ்ரீ காளி கோயிலில் கொடி ஏற்றப்படாமல் இருந்தது. சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய தினம் பக்தர்களின் கனவு, நனவாகி உள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x