Published : 19 Jun 2022 05:25 AM
Last Updated : 19 Jun 2022 05:25 AM

அக்னி பாதை திட்டத்துக்கு எதிராக அமைதியாக போராடுங்கள் - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள்

புதுடெல்லி: அக்னி பாதை திட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடுங்கள் என்று இளைஞர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கரோனாவுக்கு பிந்தைய உடல்நல பாதிப்புகளுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மத்திய அரசின் அக்னி பாதை திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல இடங்களில் தற்போது வன்முறை நிகழ்ந்து வரும் வேளையில் இளைஞர்களுக்கு கடிதம் ஒன்றை அவர் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஆயுதப் படைகளுக்கு புதிய ஆட்சேர்ப்பு கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது துரதிருஷ்டவசமானது. இது முற்றிலும் செல்லும் திசையின்றி உள்ளது. இளைஞர்களின் குரலை புறக்கணிப்பதாக உள்ளது. முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் பலர் இத்திட்டம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அக்னி பாதை திட்டத்துக்கு எதிராக போராடும் இளைஞர்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும். இளைஞர்களின் நலனை காக்கவும் இந்த திட்டத்தை வாபஸ் பெறச் செய்யவும் போராடும் எனஉறுதி அளிக்கிறேன். உண்மையான தேசபக்தர்களாக சத்தியம், அகிம்சை மற்றும் அமைதி வழியில் உங்கள் குரலை நாங்கள் வெளிப்படுத்துவோம்.

உங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான மற்றும் வன்முறையற்ற வழியில் போராட்டம் நடத்துமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன். காங்கிஸ் கட்சி உங்களுக்கு துணையாக இருக்கிறது. இவ்வாறு சோனியா காந்தி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

திரும்பப் பெற ராகுல் கோரிக்கை

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது போல அக்னி பாதை திட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பதிவில், ‘‘கடந்த 8 ஆண்டுகளாக ராணுவ வீரர்களையும் விவசாயிகளையும் பாஜக அரசு அவமதித்து வந்துள்ளது. கறுப்பு வேளாண் சட்டங்களை பிரதமர் திரும்பப் பெறவேண்டும் என நான் ஏற்கெனவே கூறியிருந்தேன். அந்த சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டன.

அதுபோலவே நாட்டின் இளைஞர்களின் கோரிக்கையை பிரதமர் ஏற்றுக்கொண்டு அக்னி பாதை திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேராவும் அக்னி பாதை திட்டம் தொடர்பாக மத்திய அரசை சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “ராணுவ ஆட்சேர்ப்புக்கு தயாராகி வரும் இளைஞர்களின் வலியை புரிந்துகொள்ள வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக ராணுவத்துக்கு ஆட்கள் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து ஓடுவதால் அந்த இளைஞர்களின் காலில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் அவநம்பிக்கை அடைந்துள்ளனர். விமானப் படை ஆட்சேர்ப்பு முடிவுகள் மற்றும் நியமனங்களுக்காக இளைஞர் காத்திருக்கின்றனர். அவர்களின் நிரந்தரப் பணி வாய்ப்பு, பதவி, ஓய்வூதியம் ஆகியவற்றை அரசு பறித்துள்ளது. ஆட்சேர்ப்பை நிறுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x