Published : 02 Jun 2014 08:21 AM
Last Updated : 02 Jun 2014 08:21 AM

செம்மரக் கடத்தலும் பலியாகும் தமிழர்களும்.. ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

புண்ணிய தலமாக விளங்கும் திருப்பதியில் உள்ள சப்த மலைகள், தற்போது குண்டுகள் முழங்கும் சத்த மலைகளாகி விட்டன. இதற்குக் காரணம் செம்மரக் கடத்தல். விலை உயர்ந்த செம்மரங்கள் இங்குள்ள சேஷாசல வனப்பகுதியில் இருந்து நாடு கடத்தப்படுகின்றன. இதில் சோகம் என்ன வெனில், சொற்ப கூலிக்கு மரம் வெட்ட வரும் தமிழர்களின் உயிர்கள் காற்றில் கலந்து விடுவதுதான்.

செம்மரங்கள் எப்படி, ஏன் கடத்தப்படுகிறது...

உலகிலேயே ஆந்திராவின் சித்தூர், கடப்பா, கர்னூல், நெல்லூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்குட்பட்ட சேஷா சல வனப்பகுதியில் தான் செம்மரங் கள் உள்ளன. தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை, சேலம், தரும புரி, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த கூலி ஆட்கள் செம்மரங்களை வெட்டும் பணியில் ஈடுபடுத்தப் படுகிறார்கள்.

ஒரு மரத்தை வெட்டி, பாலிஷ் செய்து (பட்டைகளை உரித்து) 5 அல்லது 6 அடி நீளத்திற்கு வெட்டி அவை களை கடத்தும் வாகனங்களில் ஏற்றும் வரை கூலி தொழிலாளர்களின் வேலை யாகும். இதற்கு கிலோ கணக்கில் கூலி வழங்கப்படுகிறது. இதன்படி ஒரு மரத் திற்கு சுமார் 2,000 முதல் 3,000 வரை சம்பாதிக்கிறார்கள்.

வெட்டப்பட்ட மரங்களை கடத்தல் காரர்கள், ‘பைலட்’ கள் மூலம் கடத்தப் படும் வாகனங்களை கண்காணிக்கின்ற னர்.’ பைலட்டுகள் வாகனங்களுக்கு முன் னால் பைக்குகளில் சென்று போலீஸ் கெடுபிடி உள்ளனவா என்பதை உடனுக்கு டன் வாகன டிரைவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவிப்பார்கள். இந்த முறையில்தான் செம்மரங்கள் மாநிலத்தைக் கடக்கின்றன. பின்னர் சென்னை, மங்களூர் போன்ற இடங்களில் கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு துறைமுகங்கள் மூலம் கண்டெய்னரில் ஜப்பான், துபாய், சீனா, மலேசியா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுகிறது.

அரசியல்வாதிகள், அதிகாரிகள் பின்னணி...

வெட்டப்படும் செம்மரங்கள், இங்கு டன் 15 லட்சம் முதல் 20 லட்சத்துக்கு கைமாறுகிறது. இதுவே வெளிநாட்டில், ஒரு டன் 40 லட்சம் முதல் 50 லட்சம் வரை விற்கப்படுகிறது. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளின் துணை இல்லாமல் கோடிக்கணக்கான செம்மரங்களைக் கடத்துவது சாத்தியமில்லை. இதில் ஈடுபடும் மிகப்பெரிய கடத்தல் முத லாளிகள் யார் என்ற விவரம் வெளியே தெரி வதில்லை. ஆனால், இவர்கள் மூலம் செயல்படும் புரோக்கர்கள், சிறிய கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சோதனையின்போது பிடிபடு கின்றனர். வனத்துறை சட்டம் கடுமை யாக இல்லாததால்தான் இவை கடத்தப் படுகின்றன. கடத்தல் தொழிலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு உதவிபுரியும் வனத் துறை, காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உயர் அதிகாரிகள் எச்சரித்துள் ளனர்.

திடீர் எண்கவுன்ட்டர் ஏன்?

செம்மரக் கடத்தல் இன்றோ, நேற்றோ நடக்கும் விஷயம் இல்லை. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் தொழிலாகும். ஆனால், தற்போது திடீ ரென ஆந்திர போலீஸார் தமிழக கூலி ஆட்கள் மீது என்கவுன்ட்டர் நடத்துவதன் பின்னணி பலமாக உள்ளது.

கடந்த 4 மாதங்களில் போலீஸ் என்கவுன்ட்டரில் 4 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அனை வரும் தினக்கூலிகளாக மரங்களை வெட்ட வந்தவர்களாவர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி, திருப் பதி வனக்காவலர்கள் ஸ்ரீதர், டேவிட் ஆகி யோர் செம்மரக் கடத்தல் கும்பலால் கொடூர மாக வெட்டிக் கொல்லப்பட்டனர். இத னைத் தொடர்ந்து, சேஷாசலம் வனப்பகுதி யில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆயுதங்களுடன் போலீஸார் 24 மணி நேரமும் கடத்தல் கும்பலை பிடிக்க கண்காணித்து வந்தனர்.

நாயுடுவின் ரகசிய கட்டளை...

சீமாந்திராவின் முதல்வராக பதவி ஏற்க உள்ள சந்திரபாபு நாயுடு மீது கடந்த 2003 அக்டோபர் மாதம் திருப்பதி மலைப்பாதையில் வெடிகுண்டு தாக்கு தல் நடத்தப்பட்டது. இதில் இவர் அதிருஷ்ட வசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவத் தில் முக்கிய குற்றவாளியான செம்மரக் கடத்தல் தொழிலில் ஈடுபாடுள்ள கொல்லம் கங்கி ரெட்டி, ஜாமீனில் வெளியே வந்து தற்போது வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. கங்கி ரெட்டியினால் தனது உயிருக்கு ஆபத்து என சந்திரபாபு நாயுடு ஆளுநரி டம் புகார் தெரிவித்ததால், தற்போது தலை மறைவாகி உள்ள கங்கி ரெட்டியை, ஆந் திர போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தாம் முதல்வராக பதவி ஏற்பதற்குள் சேஷாசலம் வனப்பகுதியில் ஒரு கடத் தல்காரர் கூட இருக்கக் கூடாது என்ற சந்திரபாபுவின் ரகசிய உத்தரவின் பேரில் தான் தற்போது போலீஸார் தங்களது தேடுதல் வேட்டையை அதிகரித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. 530 சிறப்புப் படை யினர் இந்த ‘ஆபரேஷன் சேஷாசலம்’ எனும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

20,000 டன் செம்மரங்கள்...

இதுவரை கடத்தல் கும்பலிடமிருந்து 20 ஆயிரம் டன் செம்மரங்களை ஆந்திர அரசு பறிமுதல் செய்து குடோன்களில் பாது காப்பாக வைத்துள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ. 50,000 கோடியாகும். இதுவே வெளிநாட்டில், சுமார் 2 லட்சம் கோடி என கூறப்படுகிறது. இவைகளை குளோ பல் டெண்டர் மூலம் விற்க தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கி உள் ளது. அதன்படி 11,000 டன்களை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. செம்மரங் களின் மூலம் வெளிநாடுகளில் இசை வாத்தியங்கள், வீட்டு அலங்கார பொருட் கள், பொம்மைகள், பெரிய அளவி லான சிலைகள் போன்றவை தயாரிக்கப் படுகின்றன. மேலும் ஆண்மையை அதி கரிக்க செய்யும் என்ற நம்பிக்கையில் வயாகரா போன்ற மாத்திரை தயாரிக்கவும் இது பயன்படுவதாகக் கூறப்படுகிறது.

கூட்டு நடவடிக்கை

செம்மரக் கடத்தலில் ஈடுபட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த கூலி தொழி லாளர்களின் உயிர்களைக் காக்க தமிழக-ஆந்திர அரசுகள் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். தொழிலாளர்களுக்கு போலீஸ்-வனத்துறை அதிகாரிகள் கவுன்சலிங் நடத்தி, வேறு தொழிலில் ஈடுபடுமாறு அறிவுறுத்த வேண்டும். செம்மரங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க இரு மாநில அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x