Published : 16 Jun 2022 03:56 AM
Last Updated : 16 Jun 2022 03:56 AM

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு - மம்தா தலைமையில் தலைவர்கள் ஆலோசனையில் நடந்தது என்ன?

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற (இடமிருந்து) சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்.பி. டி.ஆர். பாலு. படம்: பிடிஐ

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட 17 கட்சிகள் கலந்துகொண்டன.

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடக்க உள்ளது. தற்போதைய சூழலில் நாட்டில் உள்ள அனைத்து எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்களின் வாக்குகளில் சுமார் 48 சதவீத வாக்குகளை பாஜக கூட்டணி பெற்றுள்ளது. பாஜக தனது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய சுமார் 20 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக தேவைப்படுகிறது. குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் பாஜக மேலிடம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அதேநேரத்தில் பொது வேட்பாளரை நிறுத்தி பாஜக வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டு, அதற்கான முன்னெடுப்புகளில் மும்முரம் காட்டி வரு கின்றன.

இதனிடையே, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் இடையே ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி முயன்று வருகிறார். இதுதொடர்பாக டெல்லியில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு காங்கிரஸ் உள்ளிட்ட 22 கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் மம்தா தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. சுமார் 2 மணி நேரம் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிவசேனா, தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மதசார்பற்ற ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி உள்ளிட்ட 17 கட்சிகள் கலந்து கொண்டன.

காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத் பவார், பிரபுல் படேல், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் எச்.டி.தேவ கவுடா, எச்.டி.குமாரசாமி, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், மக்கள் ஜனநாய கட்சியின் மெகபூபா முப்தி, தேசிய மாநாடு கட்சியின் ஒமர் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர். தெலங்கானா ராஷ்டிர சமிதி, பிஜு ஜனதா தளம், ஆம் ஆத்மி, தெலுங்கு தேசம், சிரோன்மணி அகாலி தளம் ஆகிய கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நிறுத்த காங்கிரஸ், திரிணமூல் உள்ளிட்ட கட்சிகள் விரும்பின. ஆனால், இதில் தனக்கு விருப்பம் இல்லை என சரத் பவார் கூறிவிட்டார்.

கூட்டத்துக்கு பிறகு செய்தி யாளர்களிடம் மம்தா பானர்ஜி கூறும்போது, ‘‘குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளோம். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட சரத் பவாரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்க அவர் மீண்டும் மறுத்துவிட்டார். என்றாலும் பொது வேட்பாளர் யார் என்பது குறித்து தொடர்ந்து மற்ற கட்சிகளுடன் ஆலோசனை செய்து முடிவு எடுப்போம். இது ஒரு நல்ல தொடக்கமாகும். பல மாதங்களுக்கு பிறகு நாங்கள் ஒன்றாக கூடியுள்ளோம். இதுபோன்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தை மீண்டும் நடத்துவோம்’’ என்றார்.

திமுக எம்.பி., டி.ஆர்.பாலு கூறும்போது, ‘‘எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிடும்படி சரத் பவாரிடம் அனைத்து கட்சிகளும் கேட்டுக்கொண்டன. ஆனால், அவர் மறுத்துவிட்டார்” என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, ‘‘காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர் ஒருவரை தேர்வு செய்ய முடியாது. ஏனெனில், நாங்கள் 50 சதவீத வாக்குகளை கொண்டுள்ளோம். நாங்கள் பாஜகவுக்கு எதிராக போரிட விரும்புகிறோம். எனவே, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உடைக்க விரும்பவில்லை. ஒன்றாக போரிடுவதற்காக எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு தொடர்ந்து செல்வோம்’’ என்றார்.

ஒற்றுமை உணர்வு தொடரும்

இதையடுத்து கார்கே விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளர் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஒருமித்த கருத்தை எட்டுவதில் காங்கிரஸ் ஆக்கப்பூர்வ பங்கு வகிக்கும். எதிர்வினையாற்ற மாட்டோம். எந்த வேட்பாளரும் காங்கிரஸ் கட்சியின் மனதில் இல்லை. அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருவரை தேர்வு செய்வதற்காக அனைவருடனும் காங்கிரஸ் ஆலோசனை நடத்தும்.

சட்டப்பேரவை தேர்தலில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடும் கட்சிகளும் இக்கூட்டத்தில் இருந்தன. ஒவ்வொரு கட்சியும் தேசிய கண்ணோட்டத்துடன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றன. இந்த ஒற்றுமை உணர்வு தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறும்போது, ‘‘எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு என்னை அழைக்கவில்லை. அவர்கள் அழைத்திருந்தாலும், காங்கிரஸ் கலந்து கொண்டிருப்பதால் நாங்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x