Last Updated : 31 May, 2022 05:51 AM

 

Published : 31 May 2022 05:51 AM
Last Updated : 31 May 2022 05:51 AM

‘நெருப்புடன் மோத தேவையில்லை’ - மவுலானாக்கள் மாநாட்டில் அறிவுறுத்தல்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் பாபர் மசூதி - ராமர் கோயில் வழக்கில் நவம்பர் 2019-ல் வெளியான தீர்ப்புக்கு பின்பு மதுராவின் ஷாய் ஈத்கா மற்றும் வாரணாசியின் கியான்வாபி மசூதிகளின் மீதும் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இச்சுழலில், நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம் மவுலானாக்களின் மாநாடு, உத்தர பிரதேசத்தின் தியோபந்த் நகரில் 2 நாட்கள் நடைபெற்றது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 5,000 மவுலானாக்கள் பங்கேற்றனர். ஜமாத்-எ-உலாமா ஹிந்த் (ஜேயூஎச்) நடத்திய மாநாட்டில் மசூதிகளுக்கு எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

மாநாட்டில் முக்கிய பேச்சாளரும் ஜேயூஎச் தலைவருமான மவுலானா மகமமூத் மதானி கூறும்போது, ‘‘கியான்வாபி மசூதியின் மூலம் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை உருவாக்க முயற்சிக்கப்படுகிறது. இதனால், முஸ்லிம்கள் சொந்த நாட்டில் அந்நியர்களாகி விட்டனர். இந்த விஷயத்தில் கோபம் கொண்டு நெருப்பை வைத்து நெருப்புடன் விளையாட தேவையில்லை. நாம் பதில் நடவடிக்கையில் இறங்கினால் இந்துத்துவாவினர் தம் நோக்கத்தில் வெற்றி பெறுவார்கள். எனவே, அவர்களிடம் அமைதியாக இருந்து அன்பு காட்டி மதவாத போக்கை தோல்வியுற செய்ய வேண்டும். இந்தியாவில் பாஜக உள்ளிட்ட எந்த ஒரு கட்சியும் நிரந்தரமாக ஆட்சி செய்ய முடியாது. சிலர் இந்திய சமூகத்தில் நஞ்சை பாய்ச்ச முயல்கிறார்கள். இதை கண்டு மத்திய அரசு அமைதி காப்பது எதிர்பாராதது. இவர்களது அகண்ட பாரதம் கொள்கையால் முஸ்லிம்கள் தம் தெருவில் நடப்பதும் பாதுகாப்பற்றதாகிவிட்டது’’ என்று தெரிவித்தார்.

தீர்மானம்

இந்த மாநாட்டில், ‘‘மத்திய அரசுக்கான 267-வது சட்ட ஆணையத்தின் அறிக்கையை அமலாக்கவேண்டும். மத நல்லிணக்கத்தை குலைப்பவர்களை தண்டிக்க தனியாக கடும் சட்டங்கள் கொண்டுவர வேண்டும். உலகப் புகழ்பெற்ற பழம்பெரும் மதரஸாவான தாரூல் உலூமை, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவாவினர் தீவிரவாதிகளின் கூடாரமாக சித்தரிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது’’ போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சுமார் 103 ஆண்டுகள் பழமையான ஜேயூஎச்சின் மவுலானாக்கள் பலரும், தாரூல் உலூம் மதரஸாவில் பயின்றவர்கள். இந்நிலையில், ஜேயூஎச்சின் தீர்மானங்கள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரஷீத் ஆல்வி கூறும்போது, ‘‘ஜேயுஎச் என்பது ஒரு அரசியல் கலப்பில்லாத மத நல்லிணக்க அமைப்பாகும். இதன் தலைவர்களில் பலர் சுதந்திரப் போராட்டங்களில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துள்ளனர். இதுபோன்ற தியாகங்களை பாஜக உள்ளிட்ட பலரும் அறிய மாட்டார்கள். எனவே, ஜேயூஎச் தீர்மானங்கள், பரிந்துரைகள் நியாயமானதாகவே இருக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x