Published : 27 May 2022 05:23 AM
Last Updated : 27 May 2022 05:23 AM

பேரவையில் அநாகரீகமாக பேச கூடாது - அகிலேஷ் யாதவுக்கு ஆதித்யநாத் அறிவுரை

லக்னோ: உத்தரபிரதேச சட்டப்பேரவையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் 2-வது ஆட்சி காலத்தின் முதல் நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ரூ.6.15 லட்சம் கோடி மதிப்பிலான நிதிநிலை அறிக்கையை உ.பி நிதியமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா தாக்கல் செய்தார்.

பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நேற்று தொடங்கியது. அப்போது பேசிய துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, ‘‘அகிலேஷ் யாதவ், தான் முதல்வராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட பணிகளை புகழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது பணி நன்றாக இருந்திருந்தால், தேர்தலில் அவரது கட்சியை மக்கள் படுதோல்வி அடைய செய்திருக்கமாட்டார்கள். விரைவுச் சாலை, மெட்ரோ எல்லாம் யார் போட்டது. சைஃபை கிராமத்தில் உள்ள உங்கள் நிலத்தை விற்று இந்த வசதிகளை செய்தது போல் பேசுகிறீர்கள்?’’ என்றார்.

இதனால் ஆவேசம் அடைந்த அகிலேஷ் யாதவ், ‘‘நீங்கள் உங்க அப்பன் வீட்டு பணத்திலா ரோடு போட்டீர்கள்?’’ என கேட்டார்.

உடனே முதல்வர் யோகி ஆதித்யநாத் குறுக்கிட்டு பேசும்போது, "மரியாதைக்குரிய தலைவருக்கு எதிராக அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்துவது சரியல்ல. எதிர்க்கட்சி தலைவர் இந்தளவுக்கு ஆவேசப்படக்கூடாது. ஆட்சியில் இருக்கும்போது வளர்ச்சிப் பணிகளை செய்வது நமது கடமை. தனது சாதனைகளை எடுத்துக்கூற அரசுக்கு உரிமை உள்ளது. அதை ஏற்றுக் கொள்வதும், மறுப்பதும்தான் ஜனநாயகத்தின் பலம். ஏற்க வேண்டியதை ஏற்க வேண்டும் இல்லையென்றால், அதற்கு பதில் அளிக்க வேண்டும். ஆனால், இந்த அளவுக்கு ஆவேசப்படுவது நன்றாக இல்லை" என்றார். தகாத வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்கும்படியும் சபாநாயகர் சதீஷ் மஹனாவுக்கு முதல்வர் யோகி வேண்டுகோள் விடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x