Last Updated : 13 May, 2016 08:21 AM

 

Published : 13 May 2016 08:21 AM
Last Updated : 13 May 2016 08:21 AM

உச்ச நீதிமன்ற நீதிபதியாக நாகேஸ்வர ராவ் நேரடியாக நியமனம்: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்

உச்ச நீதிமன்ற நீதிபதியாக வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் நேரடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம், ஜெயலலிதா வழக்கில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் எல். நாகேஸ்வர ராவின் பெயரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய சட்ட அமைச்சகத்துக்கு கடந்த 3-ம் தேதி பரிந்துரை செய்த‌து. அவர் தவிர‌, அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட், மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜய் மாணிக் ராவ் கான்வில்கர், கேரள உயர் நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டிருந்த‌து.

மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடா தலைமையிலான சட்ட அமைச்சகம் கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டது. நீதிபதிகளாக பரிந்துரை செய்யப் பட்டுள்ள 4 பேரின் ஆவணங்களும் கோப்புகளும் சரி பார்க்கும் பணிகள் நேற்றுமுன்தினம் வரை நடைபெற்றது. இதையடுத்து நால்வரின் பெயர்களும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

சட்ட அமைச்சகத்தின் பரிந் துரையை ஏற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நீதிபதிகள் டி.ஓய்.சந்திரசூட், அஜய் மாணிக் ராவ் கான்வில்கர், அசோக் பூஷண் மற்றும் மூத்த வழக்கறிஞர் எல். நாகேஸ்வர ராவ் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நிய மிக்க நேற்று ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து இன்று காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் நால் வரும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கின்றனர்.

உயர்நீதிமன்றங்களில் நூற்றுக் கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பளித்த மூத்த நீதிபதிகளே பெரும்பாலும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக் கும் கொலிஜியம் அமைப்பின் உறுப் பினர்களின் அழுத்தமான பரிந் துரையில் மூத்த வழக்கறிஞர்கள் நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதி யாக நியமிக்கப்படுவார்கள்.

இந்திய சட்ட மற்றும் நீதித்துறை வரலாற்றில் வழக்கறிஞராக இருந்து நேரடியாக‌ உச்ச நீதிமன்ற நீதிபதியாக இதுவரை 6 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது 7-வது நபராக எல்.நாகேஸ்வர ராவ் வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன்பு ஜெயலலிதாவின் மற்றொரு மூத்த வழக்கறிஞரான ஃபாலி எஸ். நரிமனின் மகன் ரோஹின்டன் நரிமன் வழக்கறிஞ ராக இருந்து நேரடியாக உச்சநீதி மன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொலிஜியம் முறைப்படி அமித்வா ராய் (ஜெயலலிதா வழக்கு நீதிபதி) உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 15 மாதங் களுக்கு பிறகு தற்போது உச்ச நீதிமன்றத்தில் 4 நீதிபதிகள் நியமிக்கப்பட்டிருப்பதால் நீதிபதி களின் எண்ணிக்கை 25ல் இருந்து 29-ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x