Published : 20 May 2022 05:54 AM
Last Updated : 20 May 2022 05:54 AM

உலகத்தின் புதிய நம்பிக்கை இந்தியா - குஜராத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

புதுடெல்லி: உலகத்தின் புதிய நம்பிக்கையாக இந்தியா உருவெடுத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் குண்டல்தாம் சுவாமி நாராயண் கோயில், வடோதரா கரேலிபாக் சுவாமி நாராயண் கோயில் சார்பில் கரேலிபாக்கில் நேற்று ‘இளையோர் சிந்தனை’ என்ற பெயரில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பேசியதாவது:

சிறந்த குணநலன்கள் கொண்ட தலைமுறைகளை எவ்வாறு உருவாக்குவது என்பதை நமது வேதங்கள் தெளிவாக கற்றுத் தருகின்றன. இதுபோன்ற பயிற்சி முகாம்கள் மூலம் சமுதாயத்தில் சிறந்த இளைஞர்கள் உருவாக்கப்படுகின்றனர். அவர்கள் மூலம் நமது நாட்டின் அடையாளம், பாரம்பரியம் காக்கப்படுகிறது.

புதிய இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். புதிய இந்தியாவில் நமது சிந்தனை, செயல்பாடுகள் புதுமையானதாக, முன்னோக்கிச் செல்வதாக இருக்க வேண்டும். அதேநேரம் நாட்டின் பாரம்பரியத்தையும் கட்டிக் காக்க வேண்டும். புதிய சிந்தனை, பாரம்பரிய கலாச்சாரம், இவை இரண்டையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

உலகில் புதிது புதிதாக சவால்கள் எழும்போதும் அதற்கான தீர்வுகளை இந்தியா வழங்குகிறது. குறிப்பாக கரோனா காலத்தில் இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு தடுப்பூசிகள், மருந்துகள் அனுப்பப்பட்டன.

கரோனாவால் உலகத்தின் விநியோக சங்கிலி துண்டிக்கப்பட்டபோது, சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலம் அந்த சர்வதேச பிரச்சினையை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டது. ஒட்டுமொத்த உலகத்தின் புதிய நம்பிக்கையாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. இந்தியா சார்பில் மனித குலத்துக்கு யோகா, ஆயுர்வேதம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

மென்பொருள் முதல் விண்வெளி

இப்போது நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடிவருகிறோம். இந்தக் காலத்தில் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. உலகில் அதிக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. மென்பொருள் முதல் விண்வெளி வரை புதிய எதிர்காலத்தை நோக்கி நாடு வேகமாக முன்னேறி வருகிறது.

நாட்டுக்காக சேவையாற்ற வேண்டும் என்று காந்தியடிகள் அறிவுறுத்தி உள்ளார். நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்யும் புண்ணியம் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

நாட்டுக்காக வாழ வேண்டும், நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும். இந்த முகாமில் பங்கேற்றுள்ளவர்கள் வரும் 2023 ஆகஸ்ட் 15-ம் தேதி வரை பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளமாட்டோம் என்று உறுதியேற்க வேண்டும். இந்த சிறிய முயற்சி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

நாட்டுக்காக 75 மணி நேரம்

தாய் நாட்டின் சேவைக்காக ஓராண்டில் 75 மணி நேரத்தையாவது ஒதுக்க வேண்டும். இதற்கு ஓர் உதாரணத்தை சுட்டிக் காட்ட விரும்புகிறேன், ​​நாகாலாந்தை சேர்ந்த கிறிஸ்தவ பெண் திம்சுதுலா இம்சாங், கல்வி கற்பதற்காக காசிக்கு வந்தார். மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தால் ஈர்க்கப்பட்ட அந்த பெண், காசியை தன்னந்தனியாக சுத்தம் செய்ய தொடங்கினார். அவரோடு இளைஞர் கூட்டம் ஒன்று சேர்ந்து காசியை சுத்தம் செய்து வருகின்றனர். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x