Published : 05 May 2016 08:26 AM
Last Updated : 05 May 2016 08:26 AM

கேரளாவில் தலித் மாணவி பலாத்காரம்: மாநிலங்களவையில் எம்.பி.க்கள் கண்டனம்

கேரளாவில் தலித் மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மாநிலங்களவை எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி தலித் மாணவி ஒருவர் பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்டார்.

மாநிலங்களவை பூஜ்ஜிய நேரத்தில் இப்பிரச்சினையை மார்க்சிஸ்ட் எம்.பி. சி.பி. நாரயணன் எழுப்பினார். அவர் பேசும்போது, “எர்ணாகுளம் சம்பவம் போன்றே, காசர்கோட்டில் கடந்த வாரம் நடந்துள்ளது. திருவனந்தபுரத்தில் நேற்று நடந்துள்ளது. இது நமக்கு கரும்புள்ளி. குற்றவாளிகளைப் பிடிக்க காவல் துறை போதுமான ஆர்வம் காட்டவில்லை” என்றார்.

அவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் பேசும் போது, “இது மிகவும் கொடூரமான குற்றம். ஒவ்வொரு வரும் வெட்கப்பட வேண்டிய விஷயம்” என்றார்.

பாஜக எம்பி வேதனை

பாஜக எம்.பி. தருண் விஜய், “கேரளத்துக்கு ஒரு குழு அனுப்ப வேண்டும். பலாத்கார சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதில் கேரள அரசு முற்றிலும் தோல்வி யடைந்துவிட்டது. கடவுளின் சொந்த தேசம், பலாத்கார தேசமாக மாறிவிடக்கூடாது” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜ, பகுஜன் சமாஜ் கட்சியின் எஸ்.சி. மிஸ்ரா உட்பட பல்வேறு எம்.பி.க்களும் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவை என வலியுறுத்தினர்.

மத்திய அமைச்சர் பதில்

எம்.பி.க்களுக்கு பதில் அளித்துப் பேசிய சமூக நீதித் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட், “நாளை கேரளா சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்க உள்ளேன். அவர்களுக்கு நீதி கிடைக்க உதவுவேன்” என்றார்.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணைஅமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பேசும்போது, “இந்த பலாத்காரம் மற்றும் கொலை அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டது. இது மனிதத் தன்மையற்ற செயல்” என்றார்.

மற்றொரு சம்பவம்

கேரளாவில் மற்றொரு தலித் மாணவி நேற்று முன்தினம் மூன்று பேரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரத்திலிருந்து 50 கி.மீ. தொலைவிலுள்ள வர்கலா பகுதியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு பி.எஸ்சி. நர்ஸிங் மாணவி, ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது இரு நண்பர்களால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

அந்த மாணவி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கூட்டு பலாத்காரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x