Last Updated : 03 May, 2016 05:23 PM

 

Published : 03 May 2016 05:23 PM
Last Updated : 03 May 2016 05:23 PM

அம்மா உணவகம் பாணியில் தொழிலாளர்களுக்கு உ.பி.யில் ரூ.10-க்கு மதிய உணவு

தமிழகத்தின் அம்மா உணவகம் பாணியில் உ.பி.யிலும் குறைந்த விலை உணவகம் துவங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்காக ரூ.10 விலையில் மதிய உணவு அளிக்கும் சோதனை முறையிலான திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதை உ.பி. முதல்வர் அகிலேஷ் சிங் யாதவ் லக்னோவில் நேற்று முன் தினம் துவக்கி வைத்தார்.

நேற்று முன் தினம் முடிந்த தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, தொழிலாளர்களின் மதிய உணவாக இந்த திட்டம் சோதனை முறையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. ரூ.10-ல் இரண்டு வகையான உணவு வகைகளான முதல் வகையில், 10 முதல் 12 ரொட்டிகள், காய்கறி, பருப்பு, சாலட் மற்றும் வெல்லம் அளிக்கப்படுகிறது. மற்றொரு வகையில் 400 கிராம் சாதம், பருப்பு, சாலட் மற்றும் வெல்லம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இதற்கான துவக்க விழா நிகழ்ச்சி, லக்னோவில் கட்டப்பட்டு வரும் புதிய தலைமை செயலகத்திற்கானக் கட்டிடப் பகுதியில் கூடாரம் அமைத்து நடைபெற்றது. இதைத் துவக்கி வைத்த அகிலேஷ் அங்கிருந்த தொழிலாளர்களுடன் அமர்ந்து இந்த உணவையும் அருந்தினார். இவருடன் சேர்ந்து அவரது சில அமைச்சரவை சகாக்களும் உணவு அருந்தினர்.

இந்த விழாவில் பேசிய அகிலேஷ், ''சோதனை முறையில் இந்த மதிய உணவு லக்னோவின் நான்கு இடங்களில் இருந்து அன்றாடம் விற்பனை செய்யப்படும். இதற்கான உணவுகள் ஒரே இடத்தில் தயாரிக்கப்பட்டு 4 நிலையங்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது. இதில் கிடைக்கும் பலனைப் பொறுத்து உ.பி.யின் மற்ற மாவட்டங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.’ எனத் தெரிவித்தார்.

இந்த மலிவு விலை உணவு தயாரிப்பிற்காக விடப்பட்ட டெண்டரை ஓடும் ரயில்களில் உணவு வழங்கி வரும் ஐஆர்சிடிசி நிறுவனம் எடுத்து நடத்தி வருகிறது. இந்த திட்டத்தில் மானிய விலையில் குடிநீரும் வழங்கத் திட்டமிடப்பட்டு வருகிறது. இது குறித்த செய்தி கடந்த செப்டம்பர் 20, 2014-ல் ‘தி இந்து’வில் விரிவாக வெளியிடப்பட்டு இருந்தது நினைவு கூறத்தக்கது.

மற்ற மாநிலங்களிலும் மலிவு உணவு

தமிழகத்தின் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் அதைப் பின்பற்ற திட்டமிட்டன. இதில், ஆந்திரா, ஒடிஷா, உத்தரகாண்ட் மற்றும் உ.பி. ஆகியவை அமல்படுத்தி உள்ளன. இதில் ஒடிஷா மட்டும் அதற்கான மானியத் தொகையை மாநில அரசின் பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் பெருநிறுவனங்களிடம் இருந்து நிதியாகப் பெற்று செலவிடுகிறது. மற்றவை தம் அரசு நிதியில் இருந்து ஒதுக்கி உள்ளனர். ராஜஸ்தான் மற்றும் டெல்லியிலும் இந்த திட்டம் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்காக, டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் அரசு ரூபாய் 10 கோடி ஒதுக்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x