Last Updated : 14 May, 2016 07:13 PM

 

Published : 14 May 2016 07:13 PM
Last Updated : 14 May 2016 07:13 PM

நீதிபதி நாகேஸ்வர ராவ்: முழுமையான பின்னணி

இந்திய நீதித்துறை சரித்திரத்தில் 7-வது நபராக, வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்று இருக்கிறார் லாவு நாகேஸ்வர ராவ் (59). இவர் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர். அங்குள்ள விவ‌சாய குடும்பத்தில் பிறந்த நாகேஸ்வர ராவ் பள்ளி, கல்லூரிப் படிப்பை குண்டூரிலே முடித்தார்.

ஆந்திரா கிறிஸ்டியன் சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, பெயரிடப்படாத ஒரு தெலுங்கு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். சில பிரச்சினைகளால் அந்தப் படம் வெளியாகததால் நடிப்பை நிறுத்திவிட்டு படிப்பை தொடர்ந்தார்.

சட்டப் படிப்பை முடித்த பிறகு, சில ஆண்டுகள் கோயம்புத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்தார். அப்போது தமிழ் பேசவும், எழுதவும் கற்க முயன்றார். 1984-ம் ஆண்டு ஹைதராபாத்துக்கு சென்ற நாகேஸ்வர ராவ் ஆந்திர‌ உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒய். சூரியநாராயணாவிடம் ஜூனியராக சேர்ந்தார். ஆறு ஆண்டுகள் அவரிடம் ஜூனியராக பணியாற்றிய நாகேஸ்வர ராவ் 1990-ம் ஆண்டு முதல் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தனியாக வழக்குகளில் வாதிட தொடங்கினார்.

தொடக்கத்தில் பொதுநல வழக்குகளிலும், சர்ச்சைக்குரிய முக்கிய வழக்குகளிலும் ஆஜராகி திறம்பட வாதிட்டார். நாகேஸ்வர ராவ் ஆஜரான வழக்குகளில் பெரும்பாலும் அவருக்கு சாதகமான தீர்ப்புகளே வெளியானதால் குறுகிய பிரபலமான வழக்கறிஞராக மாறினார். இதனால் ஆந்திரா மட்டுமில்லாமல் ஒடிஸா, அஸ்ஸாம், கேரளா, பம்பாய் உயர்நீதிமன்றங்களில் முக்கிய வ‌ழக்குகளில் ஆஜராகும் வாய்ப்பு தேடிவந்தது.

இந்திய நீதித்துறையில் முன்னணி இடத்தை பிடிக்க வேண்டுமென்றால் டெல்லி போக வேண்டும் என்பதை உணர்ந்த நாகேஸ்வர ராவ் 1999-ம் ஆண்டு டெல்லிக்கு இடம்பெயர்ந்தார். உச்ச நீதிமன்றத்திலும், பார் கவுன்சிலிலும் சிறப்பாக பணியாற்றியதை தொடர்ந்து நாகேஸ்வர ராவ் 2000-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

பல்வேறு முக்கிய வழக்குகளில் திறம்பட வாதிட்டதால் கடந்த 2003-ம் ஆண்டு முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்ற போது நாகேஸ்வர ராவ் இருமுறை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்ட நாகேஸ்வர ராவ் மகள் மற்றும் மருமகன் இருவரும் வழக்கறிஞர்கள். ஓய்வு நேரங்களில் ஈ.எஸ். கார்டனர்,ட்.ஹெச். லாரன்ஸ், ஜான் கிரிஹாம் ஆகிய ஆங்கில எழுத்தாளர்களின் நூல்களை விரும்பி படிப்பார்.

தயாநிதி மாறனுக்காக வாதாடியவர்

மூன்று முறை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்துள்ள எல். நாகேஸ்வர ராவ் தமிழக முதல்வர் ஜெயலலிதா வழக்கு மட்டுமில்லாமல் அஸ்ஸாம், ஒடிஸா, மத்திய பிரதேசங்களை சேர்ந்த முன்னாள் முதல்வர்களின் வழக்குகளில் ஆஜராகியுள்ளார். இந்தியாவில் அதிக கட்டணம் வாங்கும் வழக்கறிஞர்களில் ஒருவராக உயர்ந்த நாகேஸ்வர ராவ் ஏர்செல்- மேக்ஸிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி, கலாநிதி மாறன் தரப்பிலும் ஆஜராகியுள்ளார். இதே போல ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்காகவும் ஆஜராகியுள்ளார்.

ஜெயலலிதாவின் விடுதலைக்கு வித்திட்டவர்

கடந்த 2014-ம் ஆண்டு முதல் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராகி வருகிறார். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நாகேஸ்வர ராவ் 14 நாட்கள் இடைவிடாமல் வாதாடியதால், அவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா நாகேஸ்ராவ் ராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது, மீண்டும் நகேஸ்வர ராவ் ஜெயலலிதா தரப்பில் ஆஜரானார். கர்நாடக அரசின் மேல்முறையீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 4 நாட்கள் சிறப்பாக வாதிட்டார். இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பதில் வாதம் செய்ய அனுமதி கோரி இருந்தார்.

இந்நிலையில் நாகேஸ்வர ராவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான கொலிஜியம் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது. குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து வழக்கறிஞராக இருந்து நேரடியாக நாகேஸ்வர ராவ் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க‌ப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்திய நீதித்துறை வரலாற்றில் வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற 7-வது நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நாகேஸ்வர ராவ் நீதிபதியாக பொறுப்பேற்று இருப்பதால், உற்சாகம் அடைந்துள்ள ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் அவருக்கு வாழ்த்துகளையும், பூங்கொத்துகளையும் வழங்கியுள்ள‌னர்.

முதல் முறை நிராகரிக்கப்பட்டவர்

கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை ஆர்.எம்.லோதா நாகேஸ்வர ராவை நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அப்போதைய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார். ஆனால் பல்வேறு காரணங்களினால் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அவரது பரிந்துரையை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x