Published : 04 May 2022 02:14 PM
Last Updated : 04 May 2022 02:14 PM

2024 தேர்தல் வியூகம்: மே 20-ல் பாஜக மூத்த நிர்வாகிகள்  சந்திப்பு; பிரதமர் மோடி பங்கேற்பு 

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மே 20, 21-ம் தேதிகளில் பாஜகவின் உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி குறித்த வியூகம் வகுப்பதுடன், கட்சி அமைப்புகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளிடம் பேசுவார் என தெரிகிறது.

2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு இன்னமும் 2 ஆண்டுகாலம் உள்ளபோதிலும் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைபற்றி மோடியை பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற இலக்குடன் பாஜக பணியாற்றி வருகிறது.

இதுபோல அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து தோல்வி கண்ட காங்கிரஸ் வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக பிரசாந்த் கிஷோர் வழங்கிய ஆலோசனைகள் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட குழுவை கட்சித் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார்.

அதற்கு முன்னதாக குஜராத், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறகிறது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கின்றன.

இந்தநிலையில் மே 20, 21-ம் தேதிகளில் பாஜகவின் உயர்மட்டக் கூட்டம் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பாஜக 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக கட்சி அமைப்புகளை பலப்படுத்துவது தொடர்பாக விரிவாக விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமை தாங்கும் இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள கட்சியின் மாநிலத் தலைவர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், இணைப் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

கட்சி அமைப்புகளில் செய்ய வேண்டிய மாற்றம், தேர்தலுக்கு ஏற்ப நிர்வாக அமைப்புகளில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. நிறுவியதில் இருந்து அதன் அமைப்பை வலுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் குறித்து விரிவான விவாதம் நடத்தப்படும் என்றும் பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

அனைத்து மாநில நிர்வாகிகள் கூட்டம் மே 20ம் தேதியும், பொது செயலாளர்கள் கூட்டம் மே 21ம் தேதியும் நடக்கிறது.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஓராண்டுக்குள் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோகிக்கப்பட உள்ளது.

இந்த உயர்மட்டக் கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் பேசுகிறார். அப்போது கட்சி அமைப்புகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் அவர் பரிந்துரைகளை வழங்குவார் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x