Published : 02 May 2022 04:07 AM
Last Updated : 02 May 2022 04:07 AM

உ.பி. கோரக்பூர் கோயிலில் தாக்குதல் நடத்தியவருக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு: மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் தகவல்

(கோப்புப்படம்)

லக்னோ: உத்தரபிரதேசம் கோரக்பூர் கோயிலில் தாக்குதல் நடத்திய அகமது முர்தஜா அப்பாஸி என்பவருக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது என்றும், அவர் மிகப் பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தார் எனவும் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கூறியுள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் கோயிலின் தலைமை பூசாரியாக முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளார். இந்த கோயிலுக்குள் கடந்த ஏப்ரல் 3ம் தேதி அன்று அகமது முர்தஜா(29) என்பவர் நுழைய முயன்றார். அவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடுத்த போது, அவர்களை அரிவாளால் தாக்கினார். இதில் 3 போலீஸார் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய அகமது முர்தஜா, மும்பை ஐஐடி பட்டதாரி. இச்சம்பவம் குறித்து உ.பி. தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து உ.பி. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி பிரசாந்த் குமார்அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "அகமது முர்தஜாவிடம் இருந்துபல எலக்ட்ரானிக் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அவரது சமூகஊடக கணக்குகள், வங்கி கணக்குகள், மின்னணு பணப் பரிமாற் றங்கள் எல்லாம் ஆய்வு செய்யப்பட்டன. இவர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் களுடன் தொடர்பில் இருந்துள்ளார். ஐ.எஸ் அமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளர் மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்பவருடன் சமூக ஊடகம் மூலம் தொடர்பில் இருந்துள்ளார்.

பல தீவிரவாத அமைப்புகளின் போதனைகளை அகமது முர்தஜாகேட்டுள்ளார். ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் ஜிஹாதி இலக்கியம் மற்றும் கொள்கைகளால் இவர் ஈர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டில் அன்சர்-உல்-தஹ்ஜித் என்ற தீவிரவாத அமைப்பின் உறுதிமொழியை இவர் சமூக ஊடகத்தில் எடுத்துள்ளார்.

இந்த அமைப்பு கடந்த 2014ம் ஆண்டில் ஐ.எஸ். அமைப்புடன் இணைந்தது. இவர் கடந்த 2020-ம் ஆண்டு, ஐ.எஸ். அமைப்பின் உறுதிமொழியை எடுத்துள்ளார். இந்த அமைப்பின் நடவடிக்கைகளுக்கு உதவ, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஆதரவாளர்களுக்கு இவர் ரூ.8.5 லட்சம் பணம் அனுப்பியுள்ளார்.

தீவிரவாத தாக்குதல்களை மேற்கொள்ள இவர் ஆன்லைன் மூலம் நவீன ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து கட்டுரைகளை படித்துள்ளார், வீடியோக்களை பார்த்துள்ளார். கோரக்பூர் கோயிலில் போலீஸாரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து மிகப்பெரிய தாக்குதலை நடத்துவது தான் இவரின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது" இவ்வாறு ஏடிஜிபி பிரசாந்த் குமார் கூறியுள்ளார்.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x