Published : 20 Jun 2014 08:19 PM
Last Updated : 20 Jun 2014 08:19 PM

இந்தி பேசும் மாநிலங்களில் இந்திக்கு முன்னுரிமை: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு அதிகாரிகள், அரசின் அதிகாரபூர்வ சமூக இணையதளங்களில் இந்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற உத்தரவு, இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்தி பேசாத மாநிலங்களில் இந்த உத்தரவு அமல்படுத்தப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனை மத்திய அரசின் அதிகாரபூர்வ செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “இந்தி தொடர்பாக ஏற்கெனவே இருக்கும் கொள்கை சமூக இணையதளங்களுக்காக வலியுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

கடந்த மே 27-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், “அனைத்து மத்திய அரசு அதிகாரிகளும் ட்விட்டர், பேஸ்புக், வலைப்பூ, கூகுள், யூ டியூப் உள்ளிட்ட சமூக இணையதளங்களில் அரசின் அதிகாரபூர்வ தகவல்களை வெளியிட ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டும். ஹிந்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அலுவல் மொழித்துறை இயக்குநர் அவதேஷ்குமார் மிஸ்ரா இதனை நேரடியாக கடிதம் மூலம் அமைச்சகங்கள், மத்திய அரசின் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றுக்கு அனுப்பியிருந்தார்.

மற்றொரு சுற்றறிக்கையில், இந்தியை அலுவல்ரீதியாக அதிகம் பயன்படுத்தும் பணியாளர்களுக்கு முதல் பரிசாக ரூ, 2000 மற்றும் 2,3-ம் பரிசாக முறையே ரூ.1,200 ரூ.600 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவுக்கு இந்தி பேசாத மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாஜக-வின் தமிழக கூட்டணி கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x