Published : 11 Jun 2014 10:00 AM
Last Updated : 11 Jun 2014 10:00 AM

உ.பி. மாநில காங்கிரஸ் அமைப்புகள் கூண்டோடு கலைப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அமைப்புகள் அனைத்தும் கூண்டோடு கலைக்கப்பட்டன.மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் சார்பில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே டெல்லி மற்றும் ஹரியாணா மாநில காங்கிரஸ் கட்சியின் அமைப்புகளும் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட் டுள்ளது. முன்னதாக கட்சியை வலுப்படுத்தும் வகையில் மாற்றங்களைக் கொண்டு வர சோனியா காந்திக்கு காங்கரிஸ் செயற்குழுக் கூட்டத்தில் அதிகாரம் அளிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

கட்சி அமைப்புகள் கலைப்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கட்சியின் வட்டார, மாவட்ட, மாநில குழுக்கள் அனைத்தும் கலைக்கப்படுவதாக பொதுச் செயலாளர் ஜனார்தன் துவிவேதி செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

எனினும், அந்த மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் நிர்மல் காத்ரி மட்டும் தொடர்ந்து பதவிப் பொறுப்பில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்கு புதிய தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்றும், அது வரை நிர்மல் காத்ரி தலைவராக இருப்பார் என்றும் அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில், காங்கிரஸிற்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன. அதுவும், அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி போட்டியிட்ட ரே பரேலியிலும், துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்ட அமேதியிலும் மட்டுமே அக்கட்சிக்கு வெற்றி கிடைத்தது. நாடு முழுவதும் அக்கட்சிக்கு 44 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேசத்தில் 22 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியிருந்தது. ஆனால், அதைத் தொடர்ந்து 2012-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும், தற்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் அக்கட்சியால் அதிக இடங்களில் வெற்றி பெற முடியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x