Published : 22 Apr 2022 03:59 PM
Last Updated : 22 Apr 2022 03:59 PM

தீப்பிடித்து எரியும் மின்சார வாகனங்கள்; திரும்பப் பெற உத்தரவிடப்படும்: நிதின் கட்கரி எச்சரிக்கை

புதுடெல்லி: மின்சார வாகனங்களை தயாரிக்கும் எந்த ஒரு நிறுவனமும் செயல்பாடுகளில் கவனக்குறைவாக இருப்பது தெரியவந்தால், பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படுவதுடன், குறைபாடு உடைய அனைத்து வாகனங்களையும் திரும்பப் பெற உத்தரவிடப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரித்துள்ளார்.

சர்வதேச அளவில் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மின்சார வாகனங்களுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு அதிகரித்து இருந்தபோதிலும் அதனால் ஏற்படும் விபத்துகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக மின்சார இருசக்கர வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்துள்ளன. இந்நிலையில் குறைபாடுடைய அனைத்து மின்சார வாகனங்களையும் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான பணிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதுடன், சம்பவங்கள் குறித்து விசாரிக்கவும், தரம் சார்ந்த வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க நிபுணர் குழுவை அமைக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

கடந்த இரண்டு மாதங்களில் பல்வேறு மின்சார இருசக்கர வாகன விபத்துக்கள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் மக்கள் சிலர் தங்களது உயிரை இழந்திருப்பதும், இந்த விபத்துக்களில் பலர் காயமடைந்திருப்பதும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. குறைபாடு உடைய அனைத்து வாகனங்களையும் உடனடியாக திரும்பப் பெறுவதற்கான பணிகளை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் குறித்து விசாரிக்கவும், இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் குழு ஒன்றை அமைக்க வேண்டும். தகவல்களின் அடிப்படையில், குறைபாடு உடைய வாகனங்களை தயாரித்த நிறுவனங்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், மின்சார வாகனங்களுக்கான தரம் சார்ந்த வழிகாட்டி நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

எந்த ஒரு நிறுவனமாவது அதன் நடைமுறைகளில் கவனக்குறைவாக இருப்பது தெரிய வந்தால், பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படுவதுடன், குறைபாடு உடைய அனைத்து வாகனங்களையும் திரும்பப் பெற உத்தரவிடப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x