Last Updated : 22 Apr, 2022 08:36 AM

12  

Published : 22 Apr 2022 08:36 AM
Last Updated : 22 Apr 2022 08:36 AM

அதிகரிக்கும் மின்வெட்டும், நிலக்கரி பற்றாக்குறையும்: மின்சார நெருக்கடி நிலையில் இந்தியா?

''நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக பெரிய அளவில் வெற்றுப் பேச்சுக்களை பேசி மாய பிம்பத்தை உருவாக்கி வருகிறார் பிரதமர் மோடி. ஆனால் நாட்டில் 8 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பண வீக்கம் அதிகரித்து வருகிறது. நிலக்கரி பற்றாக்குறையால் மி்ன்வெட்டு ஏற்பட்டால் சிறுதொழில்களை அழித்துவிடும். இதனால், அதிக அளவில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும்" என ராகுல் காந்தி நேற்றுமுன்தினம் நிலக்கரி பற்றாக்குறை குறித்து மத்திய அரசை சாடினார்.

ராகுல் குற்றம் சுமத்திய அடுத்த சில மணி நேரங்களில் தமிழகம், மஹாராஷ்ட்ரா, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நேற்றுமுன்தினம் திடீரென பல மணிநேர மின்வெட்டு இரவு நேரங்களில் நிகழ்ந்தது. நேற்று இரவும் இந்த நிலை பல மாநிலங்களில் நீடித்தது. உச்சக்கட்டமாக, மத்திய பிரதேச பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிக்கொண்டிருக்கும்போதே மின்வெட்டு நிகழ்ந்தது. மேடையில் அவரும், "நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு நிகழ்கிறது" என்று விளக்கம் கொடுத்தார்.

கடந்த சில வாரங்களாக நிலக்கரி தட்டுப்பாடு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தன. இப்போது நிலைமை மோசமடைந்ததன் விளைவாக மின்வெட்டு ஏற்பட துவங்கியுள்ளது. கோடை காலம் தொடங்கி, மின்சாரத்திற்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது மின்வெட்டு.

அதிகரிக்கும் மின்தேவை:

கடந்த ஆண்டு ஏப்ரலில் இந்தியாவின் அதிகபட்ச மின் தேவை என்பது 182.37 ஜிகாவாட் (GW) என்ற அளவில் இருந்தது. ஜூலை மாத வாக்கில் கோடைகாலத்தின் உச்சத்தில் இந்த தேவை 200 ஜிகாவாட் அதிகரித்தது. அதேநேரம், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தினசரி மின் தேவை சராசரியாக 187 ஜிகாவாட் என்ற அளவில் இருந்தது. அதுவே ஏப்ரல் 1-12 வரை 194 ஜிகாவாட் என்ற நிலையை எட்டியது. ஜூலையில் கோடைகாலம் உச்சத்தை தொடும் என்பதால் மின் தேவை கடந்த ஆண்டுகளை விட பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. இந்த தேவைகள் பூர்த்தி செய்யப்படுமா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வியும் நெருக்கடியும்.

நெருக்கடிக்கு என்ன காரணம்?

நமது நாடு நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தியையே பெரிதும் நம்பியுள்ளது. இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியான 396 ஜிகாவாட்களில் கிட்டத்தட்ட 210 ஜிகாவாட் மின்சாரம் அனல் மின் நிலையங்களில் இருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. இது இந்திய மொத்த மின் திறனில் சுமார் 53 சதவீதம். நிலக்கரியை ஆதாரமாக கொண்டு செயல்படும் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு பற்றாக்குறை நிலவுவதால் உற்பத்தி பாதிப்பு நிகழ்ந்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை 173 அனல் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இவற்றில் 96 ஆலைகளில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த 96 ஆலைகளில் 76 ஆலைகள் உள்நாட்டில் கிடைக்கும் நிலக்கரியை கொண்டு இயங்குபவை. 11 ஆலைகள் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மூலமாக இயங்குகின்றன. ஏப்ரல் 13 ஆம் தேதி நிலவரப்படி, 173 அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு 23.17 மில்லியன் டன்கள் என்ற அளவில் இருந்தன. இந்த ஆலைகளுக்கான ஒரு நாள் நிலக்கரி தேவை 2.76 மில்லியன் டன்கள் என்பதால் மொத்த கையிருப்பு ஒன்பது முதல் பத்து நாட்கள் வரையே இருக்கும்.

நிலக்கரி விநியோகத்தில் ஏற்பட்ட தடங்கல்கள் தட்டுபாட்டுக்கான மிக முக்கிய காரணியாக சொல்லப்படுகிறது. மத்திய அரசின் விதிமுறைகள்படி மின் உற்பத்தி நிலையங்கள் சராசரியாக குறைந்தது 24 நாட்கள் அளவுக்கு நிலக்கரி இருப்பை வைத்திருக்க வேண்டும். சில ஆண்டுகள் முன்புவரை இறக்குமதி நிலக்கரியை இந்தியா அதிகமாக சார்ந்து இருந்தது. கடந்த ஆண்டு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை அதிகரித்ததால் பெரும்பாலான நிறுவனங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியை சார்ந்து செயல்பட ஆரம்பித்தன. இதனால் இறக்குமதியில் 12 சதவீதம் சரிவு ஏற்பட்டது.

கோல் இந்தியா நிறுவனம் நாட்டின் நிலக்கரி உற்பத்தியில் கிட்டத்தட்ட 83 சதவிகிதம் பங்களிக்கிறது. இந்த நிறுவனத்தை சார்ந்தே பல அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், பிஹார், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெய்த கனமழை மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி வெகுவாகக் குறைந்தது.

இந்திய மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவது ஒன்றும் இப்போது நடக்கும் புதிய நிகழ்வு கிடையாது. ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை பிரச்சினை எழுவதுண்டு. பற்றாக்குறை பிரச்சினையின் மற்றொரு சிக்கல் நிலக்கரி உற்பத்தியை விட விநியோகம். நிலக்கரி விநியோகத்தில், நாட்டின் மின்துறை - நிலக்கரி மற்றும் ரயில்வே ஆகிய அமைச்சகங்கள் இடையே சரியான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லை என்பதே பொதுவான உண்மை. உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியை அனல் மின் நிலையங்களுக்கு கொண்டு செல்ல ரயில்வேயின் ரேக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், பெரும்பாலும் நிலக்கரியை விநியோகிக்க இந்திய ரயில்வேயில் போதிய ரேக்குகள் கிடைக்கவில்லை என நிலக்கரி அமைச்சகம் குற்றச்சாட்டு சுமத்துவது வாடிக்கையான நிகழ்வு. அதேநேரம், கோல் இந்தியா (சிஐஎல்) ரேக்குகளை ஏற்றி இறக்குவதில் தவறான முறைகளை பின்பற்றுவதாக பதிலுக்கு ரயில்வே துறையும் நிலக்கரி அமைச்சகமும் ஒன்றன்மீது ஒன்று குற்றம் சுமத்துகின்றன. இப்படியான பரஸ்பர குற்றச்சாட்டுகள் மத்திய அமைச்சகங்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளன. போதா குறைக்கு உக்ரைன் - ரஷ்யா போர் நெருக்கடியால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி விலை 44-55 சதவீதம் வரை உயர்ந்துள்ளதும் இந்தியா கவலைகொள்ள கூடிய விஷயமாக மாறியுள்ளது.

ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை தொடக்கத்தில் கோடை காலம் உச்சம் தொட வாய்ப்புள்ளதால், அடுத்த நான்கு மாதங்களுக்கு மின்சாரத் தேவை மேலும் அதிகரிக்கும். அதை சமாளிப்பதற்கு ஏற்ற நிலக்கரி கையிருப்பு என்பது மிகக் குறைவாகவே உள்ளது. நிலைமையை சமாளிக்க திருத்தப்பட்ட நிலக்கரி இருப்பு விதிமுறைகளை வெளியிட்டுள்ள மத்திய அரசு, தட்டுப்பாடுகளை கண்காணிக்க மின், நிலக்கரி, ரயில்வே ஆகிய அமைச்சக அதிகாரிகள் அடங்கிய துணைக் குழு ஒன்றை நியமித்துள்ளது. 36 மெட்ரிக் டன் நிலக்கரியை இறக்குமதி செய்யயவும் அனுமதி அளித்துள்ளது. எனினும், அவை எப்போது கிடைக்கும் என்பது போன்ற நடைமுறை சிக்கல்களால் மின்வெட்டு என்பது தவிர்க்க முடியாததாக ஆகியுள்ளது. இதனால், அடுத்தடுத்த மாதங்களில் இந்தியா மின் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x