Last Updated : 01 Apr, 2016 05:19 PM

 

Published : 01 Apr 2016 05:19 PM
Last Updated : 01 Apr 2016 05:19 PM

கொல்கத்தா மேம்பாலம் இடிந்த விவகாரம்; முதலில் கடவுளின் செயல், தற்போது விபத்து: நிறுவனம் கூறும் காரணங்கள்

கொல்கத்தா மேம்பாலம் இடிந்து விழுந்த விவகாரத்தில் கட்டுமான நிறுவனம் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருகிறது.

கொல்கத்தாவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பாலம் நேற்று இடிந்து விழுந்த விவகாரத்தில் கட்டுமான நிறுவனம் அதனை ‘கடவுளின் செயல்’ என்று வர்ணித்தது, மாறாக இன்று ‘விபத்து’ என்று கூறியுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐ.வி.ஆர்.சி.எல். நிறுவனம் கொல்கத்தாவில் இந்த மேம்பாலத்தைக் கட்டி வருகிறது, இந்நிலையில் அதன் ஒரு பகுதி நேற்று பயங்கரமாக இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழக்க, ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ஹைதராபாத் நிறுவனமான ஐ.வி.ஆர்.சி.எல். நிறுவனத்தின் சட்ட ஆலோசனைக் குழுத் தலைவர் பி.சீதா செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடவுளின் செயல் என்ற கூற்று, இம்மாதிரி நிகழ்வுகள் ஒருவர் கட்டுப்பாட்டிலும் இல்லை என்பதை தெரிவிக்கும் ஒரு விதம் அவ்வளவே.

நாங்கள் இந்தச் செய்தியினால் கடும் அதிர்ச்சியடைந்தோம். விசாரணையில் முழு ஒத்துழைப்பு அளிப்போம். ஆனால் விசாரணைக்கு காலம் ஆகும். பத்திரிகைகளில் வந்த புகைப்படங்களைப் பார்க்கும் போது குண்டுவெடிப்புப் பகுதி போல் இருந்தது. பாலம் இடிந்து விழுந்தது அனைத்துக் கோணங்களிலும் விசாரிக்கப்படும்.

இது எப்படி, ஏன் நிகழ்ந்தது? நாங்களும் காரணத்தை அறிய ஆவலாக இருக்கிறோம்” என்றார்.

நேற்று, இதே நிறுவனத்தின் மனித வளத்துறை-நிர்வாக குழுத் தலைவர் பாண்டுரங்க ராவ், “இது கடவுளின் செயல் தவிர வேறொன்றுமில்லை, இந்த 27 ஆண்டுகளில் நாங்கள் ஏகப்பட்ட பாலங்களைக் கட்டியுள்ளோம், இம்மாதிரி எங்கும் நிகழ்ந்ததில்லை” என்றார்.

பாலக்கட்டுமானப் பணிகள் ஏன் இத்தனை தாமதமானது என்ற கேள்விக்கு நிறுவனத்தின் மற்றொரு அதிகாரி கூறும்போது, “78% பணிகள் முடிந்து விட்டன, ஆனால் இன்னும் சில விஷயங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை” என்றார்.

கொல்கத்தா போலீஸ் கட்டுமான நிறுவனத்தின் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x