Published : 10 Apr 2022 12:10 AM
Last Updated : 10 Apr 2022 12:10 AM

'முதல்வர் வேட்பாளராக இருக்க சொன்னோம்... மாயாவதி பதில் அளிக்கவில்லை' - ராகுல் காந்தி

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் வேட்பாளராக இருக்கச் சொல்லி, மாயாவதியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் அவரை அணுகியது. ஆனால் அவர் போராட விரும்பாமல் எங்களுக்கு பதில் சொல்ல வில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த "தி தலித் ட்ரூத்" புத்தக வெளியிட்டு விழாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திகலந்து கொண்டார். அப்போது புத்தகத்தை வெளியிட்டு அவர் பேசியதாவது, "அரசியலமைப்பு என்பது ஒரு ஆயுதம். அமைப்புகள் இல்லாமல் அந்த ஆயுதம் அர்த்தமற்றதாகி விடும். அமைப்புகள் மக்களால் கட்டுப்படுத்தப்படவில்லை.

தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்புகளைக் கைப்பற்றி அர்த்தமற்றதாக்கி விட்டது. இந்தத் தாக்குதல் ஒன்றும் புதியது இல்லை. மகாத்மா காந்தி குண்டுகளால் துளைக்கப்பட்ட நாளிலேயே இது தொடங்கிவிட்டது. நான் பணம் வாங்கியிருந்தால் அரசாங்கத்திற்கு எதிராக தன்னால் பேச முடியாது. நாட்டில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவும் அரசியல்வாதிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தின் தலித் குரலை எதிரொலித்ததற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கன்ஷீராம் மீது எனக்கு தனிமரியாதை இருக்கிறது. உத்தரப்பிரதேச தேர்தலின் போது நாங்கள் பிஎஸ்பி தலைவர் மாயாவதிக்கு கூட்டணிக்காக அழைப்பு விடுத்தோம். மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக இருக்கவும் கேட்டுக் கொண்டோம். அதற்கு அவர் பதில் அளிக்கவும் இல்லை.

சிபிஐ, அமலாக்கப்பிரிவு, பெகாஸஸ் காரணம் தேர்தல் சமயத்தில் அவர் போராடவில்லை. அதனால் பிஜேபிக்கு தெளிவான ஒரு பாதையை அமைத்துக் கொடுத்தார். இது மக்கள் பேச வேண்டிய நேரம். மக்கள் பேசவில்லை என்றால் தொடர்ந்து அரசு அமைப்புகள் கட்டுப்படுத்தப்பட்டு அரசியலமைப்பு பின்பற்றப்படாது.

இதுதான் இந்தியாவின் யதார்த்தம். அரசியலமைப்பு சட்டம் செயலிழந்தால், தலித்துக்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர், வேலையில்லாதவர்கள், சிறுவிவசாயிகள், ஏழைகள் பாதிக்கப்படுவார்கள். அரசியல் அமைப்பு என்பது இந்தியாவின் ஆயுதம். ஆனால் அரசு அமைப்பு இல்லாமல் அதற்கு அர்த்தம் இல்லை. அரசியல் அமைப்பை பாதுகாக்க வேண்டும் என்று நாங்கள் போராடுகிறோம். ஆனால் அரசியலமைப்பு அரசு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது. அனைத்து அரசு அமைப்புகளும் ஆர்எஸ்எஸ் கையில் உள்ளது.

இந்திய அரசியலமைப்பின் சிற்பி அம்பேத்கர், அதனை ஒரு ஆயுதமாக மக்கள் கையில் கொடுத்தார். ஊடகங்கள் கட்டுப்படுத்தப்படுவதால், அரசியல் தலைவர்களைக் கட்டுப்படுத்த ஸ்பைவேர் பயன்படுத்தப்படுவதால் அந்த ஆயுதம் அர்த்தம் இல்லாமல் இருக்கிறது. இது போராட வேண்டிய நேரம். அம்பேத்கரும் காந்தியும் நமக்கு ஒரு பாதையை காட்டியிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் அந்தப்பாதையில் நடக்க வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x