Published : 06 Apr 2022 03:24 PM
Last Updated : 06 Apr 2022 03:24 PM

‘‘பிறந்தநாள் வாழ்த்துகள் பாஜக; 42 வயதாகிறது இனிமேலாவது சொன்னதை பின்பற்றக்கூடாதா?’’ - சசிதரூர் கிண்டல்

திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.சசிதரூர்: கோப்புப் படம்

புதுடெல்லி: பாஜகவின் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சி வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி.சசிதரூர், அக்கட்சி அறிவித்துள்ள சமத்துவம் உள்ளிட்ட கொள்கைகளை இன்றில் இருந்தாவது பின்பற்றக் கூடாதா என கிண்டல் செய்துள்ளார்.

பாஜகவின் நிறுவன தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 6-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விழா நாடு முழுவதும் பாஜக. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி பிரதமர் மோடி காணொலி வாயிலாக பாஜக தொண்டர்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் 2 வகையான அரசியல் நிலை காணப்படுகிறது. ஒன்று பரிவார் (குடும்பம்) பக்தி, மற்றொன்று ராஷ்ட்ர (தேசம்) பக்தி. பாஜகவை பொறுத்தவரை ராஷ்ட்ர பக்தியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. ஆனால் மற்ற கட்சிகள் பரிவார் பக்தியில் முழ்கியுள்ளன. இந்த சவாலில் பாஜக வெற்றி பெற்று இருக்கிறது என்பதை ஒவ்வொரு பாஜக. தொண்டனும் பெருமையோடு எண்ணிப் பார்க்க வேண்டும்’’ எனக் கூறினார்.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி சசி தரூர் இன்று பாஜக சட்டவிதிகளின் முதல் பக்கத்தை ஸ்கிரீன் ஷாட் எடுத்த தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 42 வது நிறுவன தினத்தன்று பாஜகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் கட்சி எதையும் பின்பற்றவில்லை என்றும், கட்சியின் விதிகள் என அறிவிக்கப்பட்டுள்ளவை மக்களை ஏமாற்றும் ஒன்றா என்று கேள்வி எழுப்பியுள்ளார். கட்சி ஆவணக் கொள்கைகளை இனிமேலாவது பின்பற்றக்கூடாதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவை ஒரு வலுவான மற்றும் வளமான தேசமாக கட்டமைக்க பாஜக உறுதி கொண்டுள்ளதாகவும், நவீனமாகவும், முற்போக்கு கண்ணோட்டத்தில் அறிவார்ந்து செயல்பட உறுதி பூண்டுள்ளதாகவும் பாஜகவின் சட்ட திட்டங்களில் குறிப்பிட்டுள்ளீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: ‘‘இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஜக! உங்களுக்கு இன்று 42 வயதாகிறது. உங்கள் சொந்த கட்சியின் சட்ட விதிகளின்படி செயல்படத் தொடங்குவதற்கான நேரம் இதுவல்லவா?. உங்கள் கட்சியின் கொள்கை ஆவணத்தின் முதல் பக்கத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளவற்றில் உண்மையில் நம்புவது அல்லது நடைமுறைப்படுத்துவது எதுவுமே இல்லை. இந்த ஆவணம் கூட உங்கள் கட்டுக்கதை ஜும்லாக்களில் ஒன்றா?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x