Published : 04 Apr 2022 08:16 PM
Last Updated : 04 Apr 2022 08:16 PM

தேர்வுப் பணிக்கு வரும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஹிஜாப் அணிய தடை - கர்நாடகா கல்வி அமைச்சர்

பெங்களுரூ: தேர்வுப் பணிக்கு வரும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஹிஜாப் அணிந்து வந்தால், அவர்கள் தேர்வுப் பணி செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் தெரிவித்துள்ளார்.

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு அரசு தடை விதித்தது செல்லும் கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, அந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்த நிலையில், பசவராஜ் பொம்மையா தலைமையிலான மாநில அரசு, எஸ்எஸ்எல்சி மற்றும் ப்ரீ யுனிவர்சிட்டி தேர்வு பணிகளுக்கு ஹிஜாப் அணிந்து வரும் ஆசிரியர்களை தேர்வுப் பணிக்கு அனுமதி அளிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளது.

இதனை உறுதி செய்துள்ள கர்நாடகா தொடக்க மற்றும் மேல்நிலை கல்வி அமைச்சர் பி.சி. நாகேஷ், "அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு எந்த உடைக் கட்டுப்பாடுகள் இல்லை என்றாலும், தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு ஹிஜாப் அணிந்து வர அனுமதி இல்லை என்பதால், தார்மிக அடிப்படையில், ஹிஜாப் அணிந்து தேர்வுப் பணிக்கு வரும் ஆசிரியர்களை நாங்கள் தேர்வுப் பணி செய்ய கட்டாயப்படுத்துவதில்லை. ஹிஜாப் அணிந்து வரும் ஆசிரியர்கள் தேர்வுப் பணிகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதனால் ஹிஜாப் அணிந்து வந்த ஆசிரியர்கள் எஸ்எஸ்எல்சி தேர்வு பணிக்கு அனுமதிக்கப்படவில்லை. கடந்த வாரம், கர்நாடகாவின் மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி தேர்வுப் பணிக்காக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியை ஒருவர் ஹிஜாப் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியதால், அவர் தேர்வு கூடத்திற்குள்ளே அனுமதிக்கப்படவில்லை.

கர்நாடகாவில் தற்போது எஸ்எஸ்எல்சி தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாதம் நடுப்பகுதி வரை தேர்வுகள் நடைபெறும். அடுத்ததாக ப்ரீ யுனிவர்சிட்டி தேர்வுகள் இந்த மாத இறுதியில் தொடங்குகிறது.

இந்த நிலையில், மாநிலம் முழுவதும், எஸ்எஸ்எல்சி மற்றும் ப்ரீ யுனிவர்சிட்டி தேர்வு பணிகளுக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை வகுப்புக்குள் அனுமதிக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொர்பாக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்ததைத் தொடர்ந்து, மாநில அரசு கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து மாணவிகள் சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம், மாநில அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்க இருப்பதால் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். மனுதாரர்களின் இந்த கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், தேர்வுக்கும் ஹிஜாப் அணிவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. விவகாரத்தை பெரிதாக்க வேண்டாம் என அறிவுரை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x