Last Updated : 19 Apr, 2016 01:49 PM

 

Published : 19 Apr 2016 01:49 PM
Last Updated : 19 Apr 2016 01:49 PM

பி.எப். பணத்தை எடுக்க கட்டுப்பாடு விதிக்கும் திட்டம் ரத்து: மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அறிவிப்பு

பெங்களூரு தொழிலாளர்களின் போராட்டத்தில் பெரும் வன்முறை

பெங்களூருவில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், வருங்கால வைப்பு நிதியில் (பிஎப்) உள்ள தொகையை வெளியில் எடுப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கும் புதிய அறிவிக்கையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

பிஎப் அமைப்பில் 5 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் உள்ளனர். ஒவ்வொரு சந்தாதாரரின் அடிப்படை மாத சம்பளத்தில் 12 சதவீத தொகையை பிடித்தம் செய்யும் நிறுவனங்கள், அதே அளவு (12%) தொகையை தங்கள் பங்களிப்பாக சேர்த்து பிஎப் அமைப்பில் செலுத்து கின்றன. இப்போதுள்ள விதிமுறை களின்படி, ஒரு நிறுவனத்திலிருந்து விலகிய ஊழியர் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு வேலை யில்லாமல் இருந்தால், தனது பிஎப் கணக்கில் உள்ள முழு தொகையையும் (100%) வெளியில் எடுக்க முடியும்.

54 வயதை எட்டிய பிறகு 90 சதவீதத் தொகையை வெளியில் எடுத்துக் கொள்ள முடியும். மீதம் உள்ள தொகை ஓய்வு பெறுவதற்கு ஓராண்டு முன்னதாக வழங்கப்படும்.

இந்நிலையில் மத்திய தொழி லாளர் நலத் துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி ஓர் அறிவிக்கை வெளியிட்டது. இதன்படி, பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப் பாக, சந்தாதாரர்கள் 2 மாதங் களுக்கு மேல் தொடர்ந்து வேலை யில்லாமல் இருந்தாலும் பிஎப் தொகை முழுவதையும் எடுக்க முடியாது.

ஆனால், வீடு கட்டுதல் அல்லது வாங்குதல், ஊழியர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களின் அவசர மருத்துவ செலவுகள், குழந்தைகளின் கல்வி செலவு அல்லது திருமணம் ஆகிய அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே எடுக்க முடியும்.

அதுவும் தங்களுடைய பங்களிப்பு தொகை, அதன் மீதான வட்டியை மட்டுமே வெளியில் எடுக்க முடியும். ஊழியர்கள் சார்பில் நிறுவனங்கள் செலுத்தும் பங்களிப்புத் தொகையை (3.67%) எடுக்க முடியாது. மீதம் உள்ள தொகை (8.33%) ஓய்வூதிய கணக்கில் செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும், நிறுவனத்தின் பங்களிப்பு தொகையை 54 வயதை எட்டினாலும் வெளியில் எடுக்க முடியாது. 58 வயதை எட்டிய பிறகே பிஎப் தொகையை எடுக்க முடியும்.

இதுபோன்ற கட்டுப்பாடு களுக்கு தொழிற்சங்கங்களும் இதர அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து ஏப்ரல் 30 வரை இந்த அறிவிக்கையை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. பின்னர் மே 31 வரை ஒத்தி வைத்தது.

இதற்கிடையே, புதிய அறிவிக்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சமூக இணையதளங்கள் மூலமும் இது தொடர்பாக பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

பெங்களூருவில் வன்முறை

பெங்களூருவில் உள்ள ஒரு ஆடை உற்பத்தி தொழிற்சாலையின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர்.

இந்தப் பிரச்சினை தீவிரமடைந் ததையடுத்து, புதிய அறிவிக் கையை அமல்படுத்துவதை மேலும் 3 மாதங்களுக்கு (ஜூலை 31 வரை) ஒத்தி வைப்பதாகவும் சில திருத்தங்களுடன் புதிய அறிவிக்கை வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

ஆனால், இந்த அறிவிக்கையை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என தொழிற்சங்கங்கள் பிடிவாதமாக இருந்தன. பெங்களூருவில் 2-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டம் நடந்தது. இதில் பெரும் வன்முறை வெடித்தது. | விரிவாக வாசிக்க >>பி.எப். புதிய விதிமுறையைக் கண்டித்து பெங்களூருவில் போராட்டம்: 5 பேருந்துகள், போலீஸ் வாகனங்கள் தீவைத்து எரிப்பு

இதையடுத்து இந்த அறிவிக்கையை ரத்து செய்வதாக மத்திய அரசு நேற்று மாலையில் அறிவித்தது.

இதுகுறித்து, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா செய்தியாளர்களிடம் கூறும்போது, “பிஎப் தொகையை திரும்ப எடுப்பது தொடர்பான அறிவிக்கைக்கு சந்தாதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, இந்த அறிவிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி பழைய விதிமுறைகள் தொடரும். இது தொடர்பாக பிஎப் வாரியத்தின் ஒப் புதல் பெறப்படும்” என்றார்.

‘உள்நோக்கம் இல்லை’

பிஎப் அமைப்பின் சென்னை மண்டல அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பிஎப் சந்தாதாரர்கள் தங்களது கணக்கில் உள்ள தொகை முழுவதையும் எடுத்து விட்டால், ஓய்வு காலத்தில் பணமின்றி கஷ்டப்படுவார்கள். இதைத் தவிர்ப்பதற்காக, முழு தொகையை எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. ஆனால், இதற்கு சந்தாதாரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த அறிவிக்கையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x