Published : 30 Mar 2022 08:39 AM
Last Updated : 30 Mar 2022 08:39 AM

திருமலையில் ஆழ்வார் திருமஞ்சனம் நண்பகல் 12 மணி வரை தரிசனம் நிறுத்தம்

கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் முழுவதும் நேற்று வாசனை திரவியத்தால் சுத்தம் செய்யப்பட்டது.

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று காலை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதனால் நண்பகல் 12 மணிக்கு பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்குவருடப்பிறப்பான உகாதி, பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஆனிவார ஆஸ்தானம் ஆகிய 4 விசேஷ நாட்கள் தொடங்குவதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமை வைகானச ஆகம விதிகளின்படி கோயில் முழுவதும் வாசனை திரவியங்களால் சுத்தப்படுத்துவது ஐதீகம். இதனை கோயில் ஆழ்வார்திருமஞ்சனம் என்று அழைக்கின்றனர். தற்போது வரும் ஏப்ரல் 2-ம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி திருநாள் வருவதையொட்டி, நேற்று காலை கோயிலில் கர்ப்பக்கிரகம், பலிபீடம், கொடிக்கம்பம், உப சன்னதிகள், விமான கோபுரம், முகப்பு கோபுரவாசல் உள்ளிட்ட அனைத்து இடங்களையும், பச்சைகற்பூரம், பன்னீர், மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட வாசனைப்பொருட்களால் ஆன திரவியத்தால் சுத்தப்படுத்தினர். இதனால் நேற்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டது.

அதன் பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் நேற்று சுமார் 6 மணி நேரம் வரைவைகுண்டம் காம்ப்ளக்ஸில் காத்திருக்க வேண்டியிருந்தது. இவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில், குடிநீர், சிற்றுண்டி, பால், மோர் போன்றவை வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x