Published : 29 Mar 2022 04:43 PM
Last Updated : 29 Mar 2022 04:43 PM

'ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணம் இது...' - பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மம்தா அவசர அழைப்பு

கொல்கத்தா: "நாட்டிலுள்ள அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைந்து ஒடுக்குமுறை சக்திக்கு எதிராக போராட வேண்டியது காலத்தின் கட்டாயம். அதனை முன்னெடுக்க வேண்டும்" என்று எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, எதிர்கட்சித் தலைவர்கள், பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது: "நமது நாட்டின் கூட்டாட்சிக் கட்டமைப்பின் மீது பாஜக பலமுறை தாக்குதல் நடத்தி வருகிறது. பாஜக அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளை குறிவைத்து, அமலாக்க இயக்குனரகம், சிபிஐ, மத்திய விஜிலென்ஸ் கமிஷன் உள்ளிட்ட மத்திய அமைப்புகளைத் தவறான முறையில் பயன்படுத்தி வருகிறது.

இந்த அடக்குமுறை ஆட்சிக்கு எதிர்த்து முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து போரட வேண்டிய நேரம் இது. நாம் அனைவரும் முன்னோக்கி செல்லும் வழியை பற்றி விவாதிக்க ஒரு கூட்டம் நடத்த வேண்டும். ஒவ்வொருவரின் வசதிக்கும் பொருத்தத்திற்கும் ஏற்ப ஓர் இடத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டத்திற்கு வர வேண்டும்.

நாட்டில் தேர்தல் நெருங்கும் சமயம் எல்லாம் அமலாக்க இயக்குனரகம், சிபிஐ, மத்திய விஜிலென்ஸ் கமிஷன், வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது.

எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்கும் ஒரே நோக்கத்துடன் மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தும் பாஜகவின் நோக்கத்தை நாம் எதிர்க்க வேண்டும். பாஜக ஆளும் மாநிலங்கள் மத்திய அமைப்பின் நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து விடுகின்றன.

எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்திருந்தபோது பாஜக கொண்டு வந்த சட்டங்கள் அமலாக்க இயக்குனரகம் மற்றும் சிபிஐ தலைவர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்க மத்திய அரசுக்கு உதவியுள்ளது.

நீதித்துறையின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தற்போது சில பக்க சார்பான அரசியல் தலையீடுகளால் மக்களுக்கு நீதி கிடைக்காமல் இருப்பது நமது ஜனநாயகத்திற்கு ஆபத்தாகும். நீதித்துறை, ஊடகங்கள், பொதுமக்கள் ஆகியவை நமது ஜனநாயகத்தின் முக்கியமானத் தூண்களாகும். இதில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால், மொத்த அமைப்பும் குலைந்து போகும்.

அரசாங்கம் சரியாக செயல்படுவதை உறுதி செய்வதும், எதிப்புக் குரல்கள் நசுக்கப்படுவதை எதிர்ப்பதும் எதிர்கட்சிகளுக்கு அரசியலமைப்பு கொடுத்துள்ள பொறுப்புகளாகும்” என்று அவர் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் பிர்பும் பகுதியில் நடந்த கலவரத்தில் 8 பேர் கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவம் மம்தா அரசுக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது. மேற்கு வங்க முதல்வரின் மருமகன் அபிஷேக், நிலக்கரிச் சுரங்க வழக்கில் அமலாக்க இயக்குனரகத்தின் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x