Published : 26 Mar 2022 08:03 AM
Last Updated : 26 Mar 2022 08:03 AM

திருமலையில் அலைமோதும் பக்தர் கூட்டம்: அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி ஆய்வு

திருமலை: திருமலையில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி ஆய்வு மேற்கொண்டார்.

கரோனா தொற்று குறைந்துவிட்டதால், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிக அளவிலான டிக்கெட்டுகளை விநியோகம் செய்து வருகிறது. இதனால் பக்தர்கள் கூட்டம் திருமலையில் அலைமோதுகிறது. சுமார் 2 ஆண்டுகளாக கரோனா தொற்றால் திருமலைக்கு பக்தர்கள் செல்வதில் சில நிபந்தனைகள் போடப்பட்டது.

இதன் காரணமாக பக்தர்கள் குறைந்த அளவே சுவாமியை தரிசித்து வந்தனர். தற்போது ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் தினமும் 30 ஆயிரம் வீதம் ஆன்லைனில் வழங்கப்பட்டு விடுகிறது. இதுமட்டுமின்றி, விஐபி பிரேக் தரிசனம்,வாணி அறக்கட்டளை மூலம் தரிசன டிக்கெட்டுகள், சுற்றுலாத்துறை மூலம் தரிசன டிக்கெட்டுகள் என ஒரு நாளைக்கு சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் தற்போது சுவாமியை தரிசித்து வருகின்றனர்.

நேற்று திருமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் விஐபி பிரேக் தரிசன சிபாரிசு கடிதங்களையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதனால், வாரஇறுதி நாட்களில் சாமானிய பக்தர்கள் அதிகமானோர் சுவாமியை தரிசித்து வருகின்றனர். நேற்று உண்டியல் மூலம் ரூ.4.18 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்.பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால், பக்தர்களின் வசதி குறித்து ஆய்வு செய்ய நேற்று அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி நேரில் களத்தில் இறங்கினார்.

அன்னதான சத்திரம், ராம்பகீச்சா விடுதி, பஸ் நிலையம் போன்ற முக்கிய இடங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டு பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தங்கும் அறைகள் கிடைக்கிறதா? தரிசன ஏற்பாடுகள், இலவச உணவு வசதி போன்றவை குறித்து அவர் பக்தர்களிடம் கேட்டறிந்தார். வரிசையில் காத்திருப்போருக்கு பால், சிற்றுண்டி போன்றவை வழங்குங்கள் என ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இன்று சனி, மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்களின் கூட்டம் இந்த 2 நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.1 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையானுக்கு நேற்று துபாயில் வசிக்கும் இந்தியஆடிட்டரான ஹனுமந்த குமார் எனும் பக்தர் சுவாமிக்கு ரூ.1 கோடியை காணிக்கையாக வழங் கினார். இதற்கான காசோலையை நேற்று அவர் திருமலையில் அறங் காவலர் ஒய்.வி.சுப்பாரெட்டியிடம் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x