Published : 22 Mar 2022 08:59 AM
Last Updated : 22 Mar 2022 08:59 AM

மணிப்பூர் முதல்வராக 2-வது முறை பிரேன் சிங் பதவியேற்பு

மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வராக பதவியேற்ற பிரேன் சிங்குக்கு ஆளுநர் இல.கணேசன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். உடன் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளார். படம்: பிடிஐ

இம்பால்: தொடர்ந்து 2-வது முறையாக மணிப்பூர் மாநில முதல்வராக என். பிரேன் சிங் பதவியேற்றார். மணிப்பூர் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. 60 தொகுதிகள் கொண்ட மணிப்பூரில் 32 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. 2002-ம் ஆண்டு முதல் 2017 வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்த மாநிலம் மணிப்பூர் ஆகும். ஒக்ராம் இபோபி சிங் அசைக்க முடியாத முதல்வராக இருந்தார். 2017 தேர்தலில் நாகா மக்கள் முன்னணி, நாகா மக்கள் கட்சியுடன் இணைந்து பாஜக ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து பிரேன் சிங் முதல்வரானார். ஆனால், அந்தக் கூட்டணியால் பாஜக அவ்வப்போது சிக்கல்களை எதிர்கொண்டது.

இதைத் தொடர்ந்து நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி கிடையாது என அறிவித்து விட்டுதான் பாஜக களமிறங்கியது. காங்கிரஸ் உட்பட சில கட்சிகள் தனித்துக் களத்தில் இறங்கின. பேரவைத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்தன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு காங்கிரஸ் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வராக பதவியேற்ற பிரேன் சிங்குக்கு ஆளுநர் இல.கணேசன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். உடன் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளார். படம்: பிடிஐஇந்நிலையில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக தலைநகர் இம்பாலில் நேற்று முன்தினம் பாஜக சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. மேலிட பார்வையாளர்களும், மத்திய அமைச்சர்களுமான நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரேன் சிங் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

சட்டப் பேரவைக் கட்சி தலைவராக பிரேன் சிங் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, ஆளுநர் இல.கணேசனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரப்பட்டது. ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து, நேற்று மாலை பதவியேற்பு விழா நடைபெற்றது. எளிமையாக நடைபெற்ற விழாவில் முதல்வராக பிரேன் சிங் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் இல.கணேசன் பதவிப்பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இதன்மூலம், தொடர்ந்து இரண் டாவது முறையாக மணிப்பூர் மாநிலத்தின் முதல்வரானார் பிரேன் சிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x