Published : 16 Mar 2022 04:30 PM
Last Updated : 16 Mar 2022 04:30 PM

”ஒரு தங்கமான அத்தியாயம்...” - பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற பகவந்த் மான் | பகத் சிங் கிராமத்தில் ஆற்றிய உரையின் 10 துளிகள்

பதவியேற்பு விழாவில் பகவந்த் மான்

சண்டிகர்: பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் இன்று (மார்ச் 16) பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 16 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.

பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில், இன்று பதவியேற்பு விழா நடந்தது. வழக்கமாக பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடைபெறும். ஆனால், இந்த முறை பகத் சிங்கின் கிராமமான கத்கர் கலனில் நடைபெற்றது. பகவந்த் மானுடன் 16 எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

பதவியேற்புக்குப் பின்னர் அவர் ஆற்றிய உரையிலிருந்து..

1. பகத் சிங்கின் கிராமத்தில் பதவியேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
2. எனது வலப்பக்கத்தில் எனது சகாக்கள் 91 பேரும், எனது இடப்பக்கத்தில் டெல்லி ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை உறுப்பினர்களும் அமர்ந்துள்ளனர். இவர்களுக்கு பலத்த கரகோஷம் மூலம் வரவேற்பைத் தெரிவிப்போம்.
3. முன்பெல்லாம் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சிகள் ஆளுநர் மாளிகையிலும், கிரிக்கெட் மைதானங்களிலும் நடைபெறும். ஆனால், நான் இங்கு கத்கர் கலனில்தான் இவ்விழா நடக்க வேண்டும் என விரும்பினேன். ஏனெனில் என் மனதில் பகத் சிங்குக்கு தனி இடம் உண்டு.
4. நாங்கள் உங்களுக்காக இங்கு நிற்கிறோம். வேலைவாய்ப்பின்மையை சரி செய்ய நிற்கிறோம். எங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து தான் நான் முதல்வராக இங்கு நிற்கிறேன்.
5. பகத்சிங், நேசித்தல் அனைவரின் உரிமை என்றார். ஆதலால் உங்கள் தாய்நாட்டை நேசியுங்கள். உங்களை தாங்கிய தாய் மண்ணை நேசியுங்கள்.
6. டெல்லியில் உள்ள மொஹல்லா மருத்துவமனைகள், அரசுப் பள்ளிக்கூடங்களை நிபுணர்கள் பலரும் ஆவலுடன் பார்த்துச் செல்கின்றனர். அது மாதிரியான நிலையை நாங்கள் பஞ்சாப்பிலும் உருவாக்குவோம்.
7. பஞ்சாப் வரலாற்றில் ஒரு தங்கமான அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. இவ்வேளையில் நாங்கள் தியாகிகள், முதியவர்களின் ஆசியை நாடுகிறோம். பஞ்சாப் மக்கள் எங்களுக்கு அளித்த வெற்றிக்கு நன்றி.
8. ஆம் ஆத்மியை தோற்றுவித்து அதை இன்று பஞ்சாப் வரை கொண்டுவந்த அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
9. பகத் சிங் பிறந்த மண்ணுக்கு வர வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. இன்று அவருக்கு அவருடைய சொந்த கிராமத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளேன். பஞ்சாப் மக்கள் நலனுக்காகப் பாடுபடுவேன் என உறுதியளிக்கிறேன். உண்மையான ஆட்சியாளர்கள் மக்களின் மனங்களில் நின்று ஆட்சி செய்வார்கள். நாங்கள் அப்படிப்பட்ட ஆட்சியை பஞ்சாப்பில் நல்குவோம்.
10. நாங்கள் மெல்ல மெல்ல எங்கள் பணிகளை முன்னெடுப்போம். அதற்குள் மக்கள் சமூகவலைதளங்களில் மோசமான வார்த்தைகள் மூலம் வசைபாடுதலை தொடங்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். பஞ்சாப்பில் இப்போது ஒரு முதிர்ச்சியடைந்த அரசாங்கம் ஆட்சியில் உள்ளது என்பதை மாநில மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x