Last Updated : 05 Apr, 2016 08:27 AM

 

Published : 05 Apr 2016 08:27 AM
Last Updated : 05 Apr 2016 08:27 AM

சரிதா நாயர் பாலியல் புகார்: கேரள முதல்வர் உம்மன் சாண்டி மறுப்பு

கேரளாவில் சூரிய மின்சக்தி ஊழலில் சிக்கியுள்ள சரிதா நாயர், முதல்வர் உம்மன் சாண்டி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இதை சாண்டி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

கேரளாவில் இளம்பெண் சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து சூரிய மின்சக்தி தகடு பொறுத்தும் நிறுவனத்தை போலியாக ஆரம்பித்து மோசடிகள் செய்ததாக புகார் எழுந்தது. இந்த ஊழலில் முக்கிய அரசியல் கட்சியினர் பலர் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் முதல்வர் உம்மன் சாண்டிக்கும் லஞ்சம் கொடுத்ததாக சரிதா நாயர் புகார் கூறினார். இந்நிலையில், கேரள தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சரிதா நாயர் கூறும்போது, ‘‘கடந்த 2013-ம் ஆண்டு பெரும்பாவூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த போது நான் எழுதிய 25 பக்க கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தகவல்கள் அனைத்தும் சரியானவை. மேலும், உம்மன் சாண்டி தனது அரசு இல்லத்தில் (கிளிப் ஹவுஸ்) என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்’’ என்று பகிரங்கமாக தெரிவித்தார்.

இதையடுத்து உம்மன் சாண்டி மற்றும் அவரது அமைச்சர்களிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று கேரள எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். கேரளாவில் மே 16-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், சரிதா நாயரின் பேட்டி ஆளும் காங்கிரஸுக்கும் முதல்வர் உம்மன் சாண்டிக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தனது அரசு இல்லத்தில் (கிளிப் ஹவுஸ்)செய்தி யாளர்களுக்கு நேற்று உம்மன் சாண்டி சிரித்துக் கொண்டே பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நல்ல குடும்பத்துக்கு எடுத்துக் காட்டான வாழ்க்கையை நான் வாழ்ந்து வருகிறேன். தேர்தல் நேரத் தில் என் மீது களங்கம் ஏற்படுத்த எதிர்க்கட்சியினர் சதி செய்கின்ற னர். அதற்கு மே 16-ம் தேதி தேர்த லில் மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள். இந்த குற்றச் சாட்டை சட்டரீதியாக சந்திப்பேன்.

கடந்த 5 ஆண்டுகளாக என் மீது எவ்வளவோ குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் சுமத்தினர். குற்றச் சாட்டுகளை யார் வேண்டுமானா லும் யார் மீதும் குற்றம் சுமத்தலாம். ஆனால், அவற்றில் ஒரு சதவீதம் உண்மை இருந்தாலும் பிரச்சினை மிக முக்கியமானதாகும்.

ஆனால், பாலியல் குற்றச்சாட்டு மிகவும் சீரியஸானது. சரிதா நாயர் குற்றச்சாட்டு குறித்து முழுமை யான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏனெனில் சூரிய மின்சக்தி ஊழல் வழக்கில் நான் பல மணி நேரம் வாக்குமூலம் அளித்திருக்கிறேன். அப்போது சரிதா நாயரின் வழக்கறிஞர் குறுக்கு விசாரணையில் பாலியல் துன்புறுத் தல் பற்றி எதுவும் சொல்லவில்லை’’ என்றார்.

சரிதா நாயர் மனு தள்ளுபடி:

சூரிய மின்சக்தி ஊழல் தொடர்பாக ஒரு நபர் கமிஷனில் தான் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், முதல்வர் உம்மன் சாண்டியிடம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் சரிதா நாயர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவின் தகுதி குறித்து நீதிபதி கெமால் பாஷா நேற்று விசாரணை நடத்தினார். பின்னர் நீதிபதி பாஷா கூறியதாவது:

சரிதா நாயர் சொல்வதில் நம்பகத்தன்மை இல்லை. அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், அவர் மீது 33 வழக்குகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், கேரள மாநிலத்தில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், சிபிஐ விசாரணை கோரி சரிதா நாயர் மனு தாக்கல் செய்துள்ளார். அரசியல் விளையாட்டுகளுக்கு நீதிமன்றத்தில் இடம் இல்லை. இவ்வாறு நீதிபதி பாஷா கருத்து தெரிவித்தார். சரிதா நாயரின் மனு விசாரணைக்கு ஏற்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x