Published : 19 Jun 2014 09:13 AM
Last Updated : 19 Jun 2014 09:13 AM

அணு விஞ்ஞானி ஹோமி பாபாவின் வீடு ரூ.372 கோடிக்கு ஏலம்

இந்திய அணுசக்தித் துறையின் தந்தை என்றழைக்கப்படும் ஹோமி பாபாவின் வீடு ரூ.372 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

'மெஹ்ராங்கிர்' என்று பெயருள்ள அந்த வீடு மும்பையில் கடலைப் பார்த்தபடி 15,000 சதுர அடியில் மூன்று மாடி கொண்ட கட்டிடமாக அமைந்துள்ளது. அந்த வீட்டை அணு சக்தி தொடர்பான அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தேசிய நிகழ்த்துக் கலை மையத்தில் புதன்கிழமை நடந்த ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

சுமார் ரூ.257 கோடிக்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த வீடு, அதைவிட ரூ. 115 கோடி கூடுதல் தொகைக்கு விற்பனை யாகியுள்ளது. இந்த வீட்டை ஏலத்தில் எடுத்தவரின் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்த்துக் கலை மையத்தினர் கூறும்போது, "தற்சமயம் வீட்டை ஏலத்தில் எடுத்தவரின் பெயரை அவருடைய வேண்டு கோளுக்கிணங்க வெளியிட மாட்டோம்" என்றனர்.

1966-ம் ஆண்டு விமான விபத்தில் பாபா இறந்த பின்பு, அந்த வீடு அவருடைய சகோதரர் ஜாம்ஷெட்டிடம் வந்தது.

தேசிய நிகழ்த்துக் கலை மையத்தை வளர்த்த ஜாம்ஷெட் அந்த வீட்டிற்குப் பாதுகாவலராக இருந்ததுடன், 2007ம் ஆண்டு தன்னுடைய இறப்புக்குப் பிறகு நிகழ்த்துக் கலை மையத்திடம் விட்டுச் சென்றார்.

இதற்கிடையே, பாபா அணு ஆய்வு மையத்தைச் சார்ந்த சில பணியாளர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில், இந்த வீட்டை ஏலத்துக்கு விடக் கூடாது, இதை அணு ஆற்றல் துறை சார்ந்த அருங்காட்சியமாக மாற்ற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தன‌ர்.

சி.என்.ஆர்.ராவ் போன்ற விஞ்ஞானிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆனால், திங்கள்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஏலத்திற்குத் தடை விதிக்க முடியாது எனவும், ஆனால் தேவைப்பட்டால் அந்த ஏலத்தைத் திரும்பப் பெற முடியும் என்றும் கூறி வழக்கை வரும் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x