Published : 04 Mar 2022 09:46 PM
Last Updated : 04 Mar 2022 09:46 PM

உக்ரைன் போர் பகுதிகளில் சிக்கியுள்ள 1,000 இந்தியர்களை மீட்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கிழக்கு உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி பகுதிகளில் போர்ப் பதற்றத்திற்கு இடையில் சிக்கியிருக்கும் சுமார் 1,000 இந்தியர்களை மீட்பதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

போர்ப் பதற்றம் நிலவி வரும் சுமி பகுதியில் 700 பேர், கார்கிவ் பகுதியில் 300 பேர் என சுமார் 1000 இந்தியர்கள் இன்னும் கிழக்கு உக்ரைன் பகுதியில் சிக்கி இருக்கிறார்கள் என்றும், அவர்கள் அங்கிருந்து அழைத்து வருவதற்கு பேருந்துகள் ஏற்பாடு செய்வது பெரும் சவாலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராணுவம் மற்றும் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்க்ஷி தெரிவிக்கையில், ”எங்களது முதன்மையான நோக்கம், போர்ப் பதற்றம் உள்ள கிழக்கு உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை வெளியேற்றுவதே. அதற்காக ரஷ்யா மற்றும் உக்ரைன் என சாத்தியப்படும் இரண்டு வழிகளையும் பயன்படுத்துகிறோம். வெளிநாட்டினர் சுமார் 2000 முதல் 3000 பேர் அங்கு இருக்கக் கூடும். அதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். கடைசி இந்தியக் குடிமகனும் அங்கிருந்து வெளியேற்றப்படும் வரையில் ஆபரேஷன் கங்கா தொடரும்” என்றார்.

இதற்கிடையில், சுமி பல்கலைகழக பகுதியில் சிக்கியுள்ள இந்திய மருத்துவ மாணவர்கள், ”ஏறத்தாழ 900 பேர் போதிய உணவு மற்றும் நீர் இல்லாமல் அங்குள்ள விடுதிகளில் பதுங்கி இருக்கிறோம். வெளியில் நடுங்க வைக்கும் குளிர் மற்றும் குண்டுவீச்சு தாக்குதல் நடக்கிறது. எப்படியாவது தங்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அவர்கள் ”நாங்கள் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஆனால், எந்தத் தகவலும் இல்லை. இங்கிருந்து எல்லை 50 கி.மீ தொலைவில் இருக்கும். ரஷ்ய எல்லைப் பகுதியில் பேருந்துகள் நிற்பதாக தகவல் சொல்கிறார்கள். அங்கு நடந்து செல்லவேண்டுமென்றால், எல்லா திசைகளில் இருந்தும் வெடிகுண்டுகள் வருகின்றன. 20 நிமிடங்களுக்கு ஒரு முறை இதுவே நடக்கிறது” என பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், ”பிரதமர் நரேந்திர மோடி அவர்களே... எங்களை எப்படியாவது இங்கிருந்து வெளியேற்றி விடுங்கள். இல்லையென்றால் நாங்கள் கொல்லப்படுவோம். தயவுசெய்து எங்களை காப்பாற்றுங்கள்” என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

கார்கிவ், சுமி, கிவி பகுதிகளில் போர் தீவிரமடைந்து வருவதாக கடந்த வாரத்தில் இந்திய தூதரகம் எச்சரித்திருந்தது. சுமி பகுதியில் ரயில் மற்றும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், வீதிகளில் நேரடி போர் நடப்பதாகவும், புறநகர் பகுதிகளில் சாலைகள் பாலங்கள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிப்ரவரி மாதம் மத்திய பகுதியில் இந்தியா முதல் எச்சரிக்கை விடுத்ததும் 20,000 இந்தியர்கள் உக்ரைன் பகுதியில் இருந்து வெளியேறிவிட்டனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 15 விமானங்கள் மூலமாக 3,000 இந்தியர்கள் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளனர் என பக்ஷி தெரிவித்துள்ளார். மேலும் அவர், அடுத்த 24 மணி நேரத்தில் 16 விமானங்கள் மூலம் இந்தியர்கள் அழைத்துவரப்பட உள்ளனர் என்றார்.

10,800 இந்தியர்கள் மீட்பு:

முன்னதாக உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆபரேஷன் கங்கா திட்டத்தின்கீழ் இன்று 17 சிறப்பு விமானங்கள் உக்ரைனுக்கு அண்டை நாட்டுக்குத் திரும்பியுள்ளன. இவற்றில் 14 சிவில் விமானங்கள், 3 சி-17 இந்திய விமானப்படை விமானங்களாகும். மேலும் ஒரு சிவில் விமானம் இன்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவில் விமானங்கள் 3,142 பேரையும், விமானப்படை விமானங்கள் 630 பயணிகளையும் ஏற்றி வந்துள்ளன. இதுவரை 9,364 இந்தியர்கள், 43 சிறப்பு சிவில் விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர். விமானப்படையைச் சேர்ந்த 7 விமானங்களில் இதுவரை 1,428 பயணிகளை அழைத்து வந்துள்ளன. மேலும், 9.7 டன் நிவாரணப் பொருட்களையும் அவை ஏற்றி வந்துள்ளன.

புகாரெஸ்டிலிருந்து 4 விமானங்களும், கோசிஸிலிருந்து 2 விமானங்களும், புடாபெஸ்டிலிருந்து 4 விமானங்களும், செஸோவிலிருந்து 3 விமானங்களும், சுசிவாவில் இருந்து 2 விமானங்களும் இன்று வந்துள்ளன. இவை அனைத்தும் சிவில் விமானங்களாகும். விமானப்படை விமானங்களை பொறுத்தவரை புகாரெஸ்டிலிருந்து 2 விமானங்களும், புடாபெஸ்டிலிருந்து ஒரு விமானமும் இன்று வந்தன.

நாளை (சனிக்கிழமை) 11 சிறப்பு சிவில் விமானங்கள், 2,200-க்கு மேற்பட்ட இந்தியர்களை திரும்ப அழைத்துவரும் என்றும், இதில் 10 புதுடெல்லிக்கும், 1 மும்பைக்கும் செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புடாபெஸ்டிலிருந்து 5 விமானங்கள், செஸோவிலிருந்து 2 விமானங்கள், சுசிவாவிலிருந்து 4 விமானங்கள் புறப்படும். இந்திய விமானப்படையைச் சேர்ந்த 4 விமானங்கள், ருமேனியா, போலந்து, ஸ்லோவேக்கியா ஆகியவற்றிலிருந்து புறப்பட்டு நாளை அதிகாலையில் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x