Published : 04 Mar 2022 08:45 AM
Last Updated : 04 Mar 2022 08:45 AM

அமராவதிதான் ஆந்திராவின் தலைநகரம்: உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

அமராவதி: ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம், தனியாக பிரிந்தபின்னர், ஹைதராபாத் தெலங்கானாவின் நிரந்தர தலைநகரமானது. இதனால், ஆந்திராவுக்கு குண்டூர்-விஜயவாடா இடையே மாநிலத்தின் மையப் பகுதியில் தலைநகரம் அமைக்க சந்திரபாபுநாயுடு ஆட்சியின் போது, இப்பகுதிகளில் உள்ள விவசாயிகளிடமிருந்து நிலங்கள் கேட்கப்பட்டன. இதற்கு விவசாயிகளும் தங்களது விவசாய நிலங்களை வழங்கினர்.

இதில் தற்காலிகமாக தலைமைச் செயலகம், சட்டப் பேரவை உள்ளிட்டவை அமைக்கப்பட்டு அந்த இடத் திலேயே பேரவை கூட்டங் களும் நடத்தப்பட்டன. ஆனால், ஜெகன் மோகன் ஆட்சிக்கு வந்ததும், 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் எனவும், அமராவதியில் சட்டப்பேரவையும், கர்னூலில் உயர் நீதி மன்றமும், விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகமும் செயல்படும் என சட்ட திருத்த மசோதா கொண்டு வந்தார். இதனை பாஜக, கம்யூனிஸ்ட்கள், தெலுங்கு தேசம் உட்பட அனைத்து கட்சிகளும் எதிர்த்தன. தலைநகருக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் தொடர்ந்து 800 நாட்களாக போராட்டம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் 70 விவசாயிகள் அமராவதிதான் ஆந்திராவின் தலைநகரமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி ஆந்திர உயர்நீதி மன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை நீதிபதி பிரசாந்த் குமார் தலைமையில் 3 பேர் கொண்ட பெஞ்ச் விசாரணை நடத்தி வந்தது. இதற்கான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. 307 பக்க அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

தலைநகர வளர்ச்சி அமைப்பு சட்டத்தின்படியே அரசு நடந்து கொள்ள வேண்டும். விவசாயிகள் - அரசு இருவர் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இன்னமும் 6 மாதங்களில் தலைநகர மாஸ்டர் பிளானை நிறைவு செய்ய வேண்டும். நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு ஒப்பந்தத்தில் கூறியபடி, வீட்டு மனைப்பட்டாக்களை அனைத்து அடிப் படை வசதிகளும் செய்து வழங்க வேண்டும். தலைநகருக்கு மட்டுமே அந்த நிலங்களை உபயோகப்படுத்த வேண்டும். தற்போது அமராவதியில் உள்ள எந்த அரசு அலுவலகத்தையும் வேறு ஊர்களுக்கு மாற்றக்கூடாது. விவசாயிகளுக்கு வழக்கு செலவாக 50 ஆயிரம் ரூபாயை அரசு வழங்கிட வேண்டும் என உயர் நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தது.

விவசாயிகள் கொண்டாட்டம்

இந்த தீர்ப்பு வெளியானதும், போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் அனைவரும் கைதட்டி நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றனர். பின்னர் பட்டாசு கொளுத்தியும் இனிப்பு வழங்கி யும் கொண்டாடினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x