Published : 28 Feb 2022 12:47 PM
Last Updated : 28 Feb 2022 12:47 PM

‘‘உக்ரைனில் இந்தியர்கள் மீது தாக்குதல்; சொந்த மக்களை கைவிட முடியாது’’- மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: உக்ரைனில் இந்தியர்கள் தாக்கப்படும் வீடியோவை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சொந்த மக்களை நாம் கைவிட முடியாது என வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது வரை ஆபரேஷன் கங்கா மூலம் ருமேனியாவிலிருந்து 5 விமானங்கள் இந்தியர்களை மீட்டுத் திரும்பியுள்ளனர்.

எஞ்சியுள்ளோரில் மீட்பதில் மிகப்பெரிய சவால்கள் உள்ளன. உக்ரைனில் தவிக்கும் இந்தியர்கள், ருமேனியா, ஹங்கேரி வாயிலாக மீட்கப்பட்டு வருகின்றனர். தற்போது போர் தீவிரமடைந்துள்ளதால் இந்திய மாணவர்கள் அவரவர் தங்கியுள்ள இடத்தை விட்டுவெளியே வரக்கூடாது, பொதுவெளியில் நடமாடக் கூடாது. இந்தியர்களுக்காக உக்ரைன் அரசு இலவச ரயில்சேவைகளை இயக்க உறுதி அளித்துள்ளது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தநிலையில் இந்திய மாணவர்களை மீட்பது தொடர்பாக நேற்று பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார். இன்று பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஹர்தீப் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு, வி.கே.சிங் ஆகியோர் உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணிகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே உக்ரைனில் இருந்து போலந்துக்கு செல்லும் இந்தியர்கள் சிலர் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உக்ரைனில் இந்தியர்கள் தாக்கப்படும் வீடியோவை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது:

இதுபோன்ற வன்முறைகளால் பாதிக்கப்படும் இந்திய மாணவர்களுக்காகவும், இந்தக் காணொளிகளைப் பார்க்கும் அவர்களது குடும்பத்தினருக்காகவும் என் மனம் நெகிழ்கிறது. எந்த பெற்றோருக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வரும் திட்டத்தை வெளிப்படையாக மத்திய அரசு அவர்களது குடும்பத்தினருடன் அவசரமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும். சொந்த மக்களை நாம் கைவிட முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x