Last Updated : 23 Feb, 2022 08:39 AM

 

Published : 23 Feb 2022 08:39 AM
Last Updated : 23 Feb 2022 08:39 AM

கர்நாடகாவில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலையில் 3 பேர் கைது

பெங்களூரு: கர்நாடகாவில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கர்நாடகாவின் ஷிமோகாவில் உள்ள சீகேஹ‌ட்டியில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஹர்ஷா (26) கடந்த 20-ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார். ஆத்திரம் அடைந்த இந்துத்துவ அமைப்பினர் ஷிமோகா, பத்ராவதியில் நடத்தியபோராட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகின.

அப்பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே திங்கள்கிழமை மாலை நடந்த ஹர்ஷாவின் இறுதி ஊர்வலத்திலும் வன்முறை வெடித்தது. காவி கொடிஏந்தி ஊர்வலமாக சென்ற இந்துத்துவ அமைப்பினர் கல்வீசி தாக்குதல்நடத்தியதில் 3 போலீஸார், 2 பத்திரிகையாளர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

அஜத்நகரில் உள்ள மசூதிக்கும் தீவைக்கப்பட்டது. விரைந்து வந்ததீயணைப்புப் படையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயைஅணைத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் போலீஸார் கண்ணீர் வெடிகுண்டு வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர்.

க‌ர்நாடக கிராம பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா கூறும்போது, ‘இவ்வழக்கில் முஸ்லிம் அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கிறது. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும்'என வலியுறுத்தினார்.

கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறும்போது, "வழக்கில் இதுவரை 12 பேரிடம் நடத்திய விசாரணையின் அடிப் படையில் முதல் கட்டமாக‌ 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். விசாரணை நடந்து வருவதால் கைதானவர்கள் குறித்து விவ ரத்தை தெரிவிக்க முடியாது. எங்களுக்கு பி.எஃப்.ஐ முஸ்லிம் அமைப்பின் மீது சந்தேகம் இருக்கிறது. விசாரணையின் முடிவில் அவர்களுக்கு இருக்கும் தொடர்பு குறித்து தெளிவாக தெரியவரும்" என்றார்.

ஹிஜாப் வழக்கு மாணவியின் சகோதரர் மீது தாக்குதல்

கர்நாடகாவின் உடுப்பியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி ஹஸ்ரா ஷிஃபா, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கில் கடந்த 10 நாட்களாக விசாரணை நடந்து வருகிறது.

கடந்த 21-ம் தேதி இரவு ஹஸ்ரா ஷிஃபாவின் சகோதரர் சைஃப் (21) மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். காயமடைந்த அவர் உடுப்பியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே நாள் நள்ளிரவில் ஹஸ்ரா ஷிஃபாவின் தந்தைக்கு சொந்தமான உணவகத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் உணவகத்தின் ஜன்னல் கண்ணாடி, நாற்காலி உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன.

இதுகுறித்து ஹஸ்ரா ஷிஃபா கூறும்போது,''எனது சகோதரர் ஹிஜாபுக்கு ஆதரவாக இருப்பதால் இந்துத்துவ அமைப்பினர் அவரை தாக்கியுள்ளனர். அவரை தாக்கியவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும். எனது தந்தையின் உணவகத்தின் மீது தாக்குதல் நடத்தியதால் பொருளாதார இழப்பீடும் வழங்க வேண்டும்'' என கோரியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x