Published : 18 Feb 2022 05:43 AM
Last Updated : 18 Feb 2022 05:43 AM

கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம்: தமிழகம் உட்பட 5 மாநிலங்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை

விஜயவாடா: கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் குறித்து தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட 5 மாநில அரசுகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது.

மகாராஷ்டிர மாநிலம் திம்பகேஷ்வரில் உற்பத்தியாகும் கோதாவரி நதி, கங்கைக்கு அடுத்தபடியாக நாட்டின் 2-வது நீளமான நதி ஆகும். இது தெலங்கானா, ஆந்திரா, சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் பாய்ந்து வங்கக் கடலில் கலக்கிறது. இந்த நதியில் ஆண்டுக்கு 247 டிஎம்சி நீர் வீணாக கடலில் கலப்பதாக கூறப்படுகிறது. இந்த உபரி நீரை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக, கோதாவரி நதியை கிருஷ்ணா, பென்னா மற்றும் காவிரி நதியுடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதை முன்னுரிமை திட்டமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தென் மாநிலங்களின் தண்ணீர் பிரச்சினைக்கு நீண்டகால அடிப்படையில் நிரந்தர தீர்வு காணும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் இன்சம்பள்ளியில் இருந்து தமிழகத்தில் உள்ள கல்லணை அணைக்கட்டு வரை இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கு தொடர்பு உள்ளது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, தேசிய நதிநீர் மேம்பாட்டு அமைப்பு, கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு கடந்த ஆண்டு அனுப்பி வைத்தது.

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது தங்களுக்கு 200 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என தமிழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பாசனம், குடிநீர் மற்றும் தொழிற்சாலை தேவைகளுக்காக தமிழகத்துக்கு 84 டிஎம்சி நீர் வழங்கலாம் என திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய நதிநீர் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் டெல்லியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது. மத்திய நீர்வளத் துறை செயலாளர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் நீர்வளத் துறை செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தெலங்கானா மாநிலத்தில் உள்ள நாகார்ஜுனா சாகர் அணை, ஆந்திராவில் உள்ள சோமசீலா அணை வழியாக தமிழகத்தின் கல்லணைக்கு தண்ணீர் கொண்டுவரப்பட உள்ளது. இதில் கோதாவரி, கிருஷ்ணா, பென்னா, காவிரி நதிகள் இணைகின்றன. 1,211 கி.மீ தொலைவுக்கு கால்வாய் தோண்டி பைப்லைன் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படும். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள இத்திட்டத்தை தமிழக அரசு ஆவலுடன் எதிர்பார்க்கிறது. அதேநேரம், இத்திட்டத்தால் தங்களுக்கு பாதகம் ஏற்படும் என தெலங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்கள் கருத்து தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x