Last Updated : 05 Apr, 2016 03:06 PM

 

Published : 05 Apr 2016 03:06 PM
Last Updated : 05 Apr 2016 03:06 PM

பனாமா பேப்பர்ஸ் அம்பலம் விவகாரம்: ரகுராம் ராஜன் கருத்து

பனாமா பேப்பர்ஸ் அம்பலப் பட்டியலில் சுமார் 500 இந்தியர்கள் பெயர் இடம்பெற்றிருப்பதை அடுத்து அயல்நாட்டில் வைத்திருக்கும் கணக்குகளில் எது நியாயமானது என்று விசாரணையில் தெரியவரும் என்று ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நேற்று ‘பனாமா பேப்பர்ஸ்’ தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. இதில் நேரடி வரி வாரியம், மத்திய ரிசர்வ் வங்கி, நிதிமுறைகேடு உளவு அமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்த விசாரணைக் குழு குறித்தும் பனாமா பேப்பர்ஸ் குறித்தும் கூறிய ரகுராம் ராஜன், “இந்த விவகாரத்தை விசாரிக்கும் குழுவில் ஆர்பிஐ இடம்பெற்றுள்ளது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெனில் அயல்நாடுகளில் வங்கிக் கணக்குகள் தொடங்க நியாயமான காரணங்கள் உண்டு. தாராள பணம் அனுப்புதல் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை அனுப்ப வழிவகையுண்டு. ஆனால் இதில் எது சட்டத்துக்குட்பட்டது, எது சட்டத்தை மீறியது என்பதைப் பார்க்க வேண்டும். இந்த விசாரணையின் முக்கியத்துவம் அதுவே” என்றார்.

தாராள பணம் அனுப்புதல் திட்டத்தின் கீழ் அனைத்து இந்திய குடிமகன்களும், மைனர்கள் உட்பட, நிதியாண்டு ஒன்றிற்கு 2,50,000 அமெரிக்க டாலர்கள் வரை அனுமதிக்கப்பட்ட நடப்பு அல்லது மூலதனக் கணக்கு நடவடிக்கைகளுக்காக பணம் அனுப்ப சட்டத்தில் இடமுண்டு.

பனாமா பேப்பர்ஸ் பட்டியல் அம்பலமானதை அடுத்து நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் பிரதமர் நரேந்திர மோடி இது பற்றி விசாரிக்க சிறப்புக் குழுவை அமைக்க ஆலோசனை வழங்கினார். அதன் படி சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.

ஆர்பிஐ உதவி ஆளுநர் எச்.ஆர்.கான் இது குறித்து கூறும்போது, “ஃபெமாவின் கீழ் சில பண நடவடிக்கைகளுக்கு அனுமதி உண்டு, சில நடவடிக்கைகளுக்கு அனுமதி கிடையாது. எனவே இந்த விசாரணை எது சட்ட விரோத கணக்கு என்பதை கண்டுபிடிக்கும்” என்றார்.

கருப்புப் பண பதுக்கல் விவகாரத்துக்காக உச்ச நீதிமன்றத்தினால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவும் பனாமா பேப்பர்ஸ் பட்டியலையும் பனாமா பண முதலீடு நடவடிக்கைகளையும் துருவி ஆராயும் என்று நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x