Published : 06 Feb 2022 05:40 PM
Last Updated : 06 Feb 2022 05:40 PM

பஞ்சாப் தேர்தல் | சரண்ஜித் சிங் சன்னி முதல்வர் வேட்பாளர்: ராகுல் காந்தி அறிவிப்பு

நவ்ஜோத் சிங் சித்து, ராகுல் காந்தி, சரண்ஜித் சிங் சானி (இடமிருந்து வலமாக)

பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னியை அறிவித்தார் ராகுல் காந்தி.

"பஞ்சாப் மக்கள் தங்களின் முதல்வர் வேட்பாளர் ஓர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவரால் தான் ஏழைகளின் வலியை உணர முடியும் என்று விரும்பினர். அவர்களின் விருப்பப்படி வேட்பாளரைத் தேர்வு செய்வது கடினமாகவே இருந்தது. சரண்ஜித் சிங் சன்னி தான் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராக இருப்பார்" என்று ராகுல் காந்தி அறிவித்தார்.

பஞ்சாபில் பிப்ரவரி 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இந்த முறை பஞ்சாபில் ஆட்சி அமைக்க முயல்கிறது. இதற்கு ஏதுவாக 300 யூனிட் இலவச மின்சாரம், அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ரூ1,000 உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளையும் ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

பஞ்சாபில் கடந்த 2017 தேர்தலில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ், உட்கட்சிப் பூசலால் ஊசலாடி வருகிறது. மாநிலத்தில் பாஜக மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில் ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.

கடந்த முறை காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன், முதல்வர் வேட்பாளராக அறிவித்தபடியே, அப்பதவியில் கேப்டன் அம்ரீந்தர் சிங்கை காங்கிரஸ் அமர்த்தியது.

ஆனால், பாஜக-வில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு தாவிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் அம்ரீந்தர் சிங்குக்கு மோதல் ஏற்பட்டது. இதனால், அம்ரீந்தர் பதவி நீக்கப்பட்டார். அதன்பின்னர், நவ்ஜோத் சிங் சித்து மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். முதல்வராக சரண்ஜித் சிங் சன்னியை அமர்த்தியது. இப்போது சன்னிக்கும் சித்துவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு முற்றியுள்ளது.

தலித் சமூகத்தைச் சேர்ந்த சன்னியை முதல்வர் வேட்பாளராக்கினால், சித்துவின் ஜாட் சீக்கியர் வாக்குகள் பெறுவது காங்கிரஸுக்கு சிக்கலாகிவிடும் என்று கட்சிக்குள் சலசலப்புகள் நிலவியது. பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்வர் பதவியை சுழற்சி முறையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் இறங்கினார் ராகுல் காந்தி. வேட்பாளர் சர்ச்சையை முடித்துவைக்க பஞ்சாப் சென்ற அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) லுதியானாவுக்கு காரில் புறப்பட்ட போது பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர் காரை ஓட்டினார். பின் இருக்கையில் ராகுல் காந்தியும், இப்போதைய பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவும், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியும் அமர்ந்திருந்தனர். இந்த வீடியோவை வெளியிட்ட ராகுல் காந்தி, ஒற்றுமைமிகு காங்கிரஸ் பஞ்சாப் தேர்தலில் வெற்றி காணும் எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, அத்தனை சர்ச்சைகளுக்கும் காரணகர்த்தாவாகப் பார்க்கப்படும் சித்து இன்று காலை ஒரு ட்வீட்டில் எல்லாம் ராகுல் காந்தி முடிவுப்படியே நடக்கும் எனக் கூறியிருந்தார்.

இதனால் தேர்தல் முடியும் வரை உட்கட்சிப் பூசல்களுக்கும் பஞ்சாப் காங்கிரஸ் விடுமுறை விட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

வழக்கமாகவே காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் சட்டப்பேரவை கட்சிக் குழுவைக் கூட்டி முதல்வரை தேர்வு செய்யும். இந்நிலையில் சரண்ஜித் சிங் சன்னியை பஞ்சாப் தேர்தல் முதல்வர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x