Published : 02 Feb 2022 08:48 AM
Last Updated : 02 Feb 2022 08:48 AM

மத்திய அரசு பட்ஜெட்: ஒரு வரலாற்று பயணம்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-2023-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். நிதி அமைச்சராக இது அவருக்கு நான்காவது பட்ஜெட். இந்தத் தருணத்தில் மத்திய பட்ஜெட் தொடர்பான வரலாற்றுத் தகவல் களை சற்றுப் பார்க்கலாம்.

இந்தியாவின் முதல் பட்ஜெட்: 1860 ஏப்ரல் 7 அன்று இந்தியாவில் முதல் முதலாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த அரசியல் வாதியும் பொருளாதார நிபுணரு மான ஜேம்ஸ் வில்ஸன் பிரிட்டிஷ் அரசிடம் அந்தப் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் 1947 நவம்பர் 26 அன்று தாக்கல் செய்யப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்ற, தமிழரான ஆர் கே சண்முகம் செட்டி அந்தப் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

நீண்ட பட்ஜெட் உரை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020 பிப்ரவரி 1 அன்று, 2020-21-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, அந்த பட்ஜெட் உரை 2 மணி நேரமும் 42 நிமிடங்கள் வரை நீண்டது. 2019 ஜூலை மாதம் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த அவரது முதல் பட்ஜெட் உரை 2 மணி 17 நிமிடங்களும் நீண்டது.

அதிக வார்த்தைகளைக் கொண்ட பட்ஜெட் உரை: 1991-ல் நரசிம்ம ராவ் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் ஆற்றிய பட்ஜெட் உரைதான் அதிக வார்த்தைகளைக் கொண்டபட்ஜெட் உரையாகும். அவரதுபட்ஜெட் உரை 18,650 வார்த்தைகளைக் கொண்டிருந்தது. 2018-ல்நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் பட்ஜெட் உரை 18,604 வார்த்தைகளைக் கொண்டிருந்தது.

குறுகிய பட்ஜெட் உரை: 1997-ல் நிதி அமைச்சர் ஹிருபாய் முல்ஜிபாய் படேல் ஆற்றிய பட்ஜெட் உரைதான் குறைவான வார்த்தைகள் கொண்ட உரை யாகும். மொத்தமாகவே 800 வார்த்தைகள்தான் அந்த உரையில் இருந்தன.

அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர்கள்: முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் நிதி அமைச்சராக இருந்த 1962-1969 காலகட்டத்தில் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். ப.சிதம்பரம் (9), பிரணாப் முகர்ஜி (8), யஸ்வந்த் சின்ஹா (8), மன்மோகன் சிங் (6) என்ற எண்ணிக்கையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.

நேரம்: 1999-ம் ஆண்டு வரையில் பிரிட்டிஷ் நடைமுறைப்படி, பிப்ரவரி மாதத்தின் இறுதி வேலை நாளில் மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 1999-ல் அந்த நடைமுறை மாற்றப்பட்டது. அப்போது நிதி அமைச்சராக இருந்த யஸ்வந்த் சின்ஹா காலை11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார். 2017-ல் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பிரிட்டிஷ் நடைமுறையான பிப். மாதத்தின் இறுதி வேலை நாளுக்குப் பதிலாக, பிப். 1-ல் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

மொழி: 1955-ம் ஆண்டு வரையில் மத்திய பட்ஜெட் ஆங்கிலத்தில் மட்டும்தான் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், 1955-ல்காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இந்தி மற்றும் ஆங் கிலம் என இரு மொழிகளிலும் பட்ஜெட்டை அச்சிட்டது.

காகிதமில்லா பட்ஜெட்: 2021-22-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் காகிதத்தில் அச்சிடப்பட்டு தாக்கல் செய்யப்படவில்லை. டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்பட்டது.

முதல் பெண்: 1970-71-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ததன் வழியே முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் என்ற அடையாளம் பெற்றார். மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த இரண்டாவது பெண் நிர்மலா சீதாராமன் ஆவார். அவர் 2019-ல் தாக்கல் செய்தார்.

ரயில்வே பட்ஜெட்: 2017-ம்ஆண்டு வரையில் ரயில்வே பட்ஜெட்டும் மத்திய பட்ஜெட்டும் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், 2017-ல் அந்த நடைமுறை மாறியது. 2017 முதல் ரயில்வே பட்ஜெட்டானது மத்திய பட்ஜெட்டுடன் சேர்த்தே தாக்கல் செய்யப் படுகிறது.

கருப்புப் பட்ஜெட்: 1973-ல்இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தில், நிதி அமைச்சர் யஸ்வந்த்ராவ் சவான் தாக்கல் செய்த பட்ஜெட் ‘கருப்புப் பட்ஜெட்’ என்று அழைக்கப்பட்டது. அப்போது இந்தியா மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வந்தது. இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை ரூ.550 கோடியாக இருந்தது.

கனவு பட்ஜெட்: 1997-ல் ப.சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட் ‘கனவு பட்ஜெட்’ என்று அழைக்கப்பட்டது. 40 சதவீதமாக இருந்த தனிநபர் வருமான வரி 30 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதேபோல் உள்நாட்டு நிறுவனங்களுக்கான வருமான வரி 35 சதவீதமாக குறைக்கப்பட்டது. சுங்க வரி 40 சதவீதமாக குறைக்கப்பட்டது.

மில்லினியம் பட்ஜெட்: 2000-ல் நிதி அமைச்சர் யஸ்வந்த் சின்ஹா தாக்கல் செய்த பட்ஜெட், இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சிக்கு பாதை போட்டது. அந்தப் பட்ஜெட்டில் கணினி மற்றும் கணினி தொடர்புடைய சாதனங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது.

திரும்பப் பெறப்பட்ட பட்ஜெட்:2002-ல், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் யஸ்வந்த சின்ஹா தாக்கல் செய்த பட் ஜெட்டில் பல அறிவிப்புகள் திரும் பப் பெற்றப்பட்டன.

திருப்புமுனை பட்ஜெட்: 1991-ல், நரசிம்மராவ் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சின் தாக்கல் செய்த பட்ஜெட்டானது இந்திய பொருளாதா வரலாற்றில் திருப்புமுனை பட்ஜெட்டாக பார்க்கப்படுகிறது. அந்தப் பட்ஜெட் இந்தியாவின் பொருளாதாரப் போக்கை மாற்றி அமைத்தது. அந்தப் பட்ஜெட்டில் லைசன்ஸ் ராஜ் நடைமுறை ஒழிக்கப்பட்டு தாராளாமயமாக்கல் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x