Last Updated : 01 Feb, 2022 12:08 PM

 

Published : 01 Feb 2022 12:08 PM
Last Updated : 01 Feb 2022 12:08 PM

உ.பி . தேர்தலில் பாஜக தலைவர்கள் மட்டுமே தீவிர நேரடிப் பிரச்சாரம்: விலகியிருக்கும் அகிலேஷ், மாயாவதி மீது எழும் கேள்விகள்

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் சட்டப்பேரவைக்கான நேரடித் தேர்தல் பிரச்சாரத்தை பாஜக மட்டுமே செய்து வருகிறது. நேரடி தேர்தல் பிரச்சாரத்திலிருருந்து விலகியிருக்கும் சமாஜ்வாதியின் அகிலேஷ், பகுஜன் சமாஜின் மாயாவதி மீது சந்தேகக் கேள்விகள் எழுந்துள்ளன.

கரோனா பரவலால் இந்தமுறை ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் நேரடிப் பிரச்சாரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இந்தத் தடை, பிப்ரவரி 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால், பிப்ரவரி 10 இல் நடைபெறும் உ.பி. முதல்கட்ட தேர்தலில் முழுவதும் நேரடிப் பிரச்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. துவக்கத்தில் ஐந்து பேர் குழுவிற்கு அளித்த பிரச்சார அனுமதி தற்போது இருபதாக தேர்தல் ஆணையம் உயர்த்தி உள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாஜகவின் முக்கியத் தலைவர்கள் பலரும் நேரடிப் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இப்பிரச்சாரங்களில் பத்திற்குப் பதிலாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வது தவிர்க்க முடியாததாகி விட்டது.

உத்தரப்பிரதேசத்தில் நேரடிப் பிரச்சாரத்தை முதன்முதலாக மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா, கைரானாவில் துவக்கினார். தொடர்ந்து இவர், மதுரா, சம்பல், முசாபர்நகர் தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்திருந்தார்.

உத்தரப்பிரதேசத்தில் முதல்வரான யோகி ஆதித்யநாத், அலிகர், காஜியாபாத், புலந்த்ஷெஹர், ஹாபூர், ஆக்ரா பகுதிகளில் பிரச்சாரம் முடித்து அதை தொடர்கிறார். இந்த பிரச்சாரத்தை மத்திய அமைச்சர்களில் பாதுகாப்புத்துறையின் ராஜ்நாத்சிங், ஜவுளித்துறையின் ஸ்மிருதி இராணி மற்றும் பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பிநட்டா ஆகியோரும் தனித்தனியாக செய்யத் துவங்கினர்.

இவர்கள் அனைவரும் சேர்ந்து முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மேற்குப்பகுதியின் பெரும்பாலானமாவட்டங்களில் பிரச்சாரம் முடித்து விட்டனர். ஆனால், எதிர்கட்சிகளில் முன்னாள் உத்தரப்பிரதேசம் முதல்வர்களான சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் நேரடிப் பிரச்சாரம் செய்யவில்லை.

லக்னோவில் இருந்தபடியே இணையதளம் வழியாகப் பிரச்சாரம் செய்யும் அகிலேஷ் நண்பகலில் செய்தியாளர் கூட்டமும் நடத்தி வருகிறார். இதனால், இரண்டு தலைவர்கள் மீது பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

நேரடிப் பிரச்சாரம் செய்யாததன் மூலம் அகிலேஷ் தனது தோல்வியை முன்கூட்டியே ஒப்புக் கொள்கிறாரா? அல்லது தன் கட்சிக்கே வெற்றி என்ற அதீத நம்பிக்கையில் உள்ளாரா? எனக் கேள்விகள் எழுப்பட்டு வருகின்றது.

இது குறித்து பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம் முதல்வரான யோகி ஆதித்யநாத் கூறும்போது, ”அகிலேஷ்ஜி ஓர் அரசியல் செல்வந்தர் குடும்பத்தில் வந்தவர். அவர் மெல்ல காலதாமதமாக மதியம் விழுத்தெழுவார்.

பிறகு, தனது கூட்டணி கட்சி தலைவருடன் செய்தியாளர் கூட்டம் நடத்தி அரசால் நிறைவேற்ற முடியாத புதுப்புது சலூகைகளை அறிவிப்பார். அடித்தட்டு மக்களை நேரில் சந்தித்து அவர்களது பிரச்சனைகளைக் கேட்கும் வழக்கம் அகிலேஷ்ஜிக்கு இருந்ததில்லை.” எனத் தெரிவித்தார்.

அகிலேஷ் யாதவ் பதில்

தன் மீதான இந்த புகாரை மறுக்கும் அகிலேஷ் , “ நேரடிப் பிரச்சாரத்தில் ஈடுபடும் பாஜக தலைவர்கள் பிரச்சாரம் மீது குறை கூறுகிறார். நேரடிப் பிரச்சாரத்தின் போது, பாஜக தலைவர்கள் பலரும் முகக்கவசம் அணிவதில்லை.

பிரச்சார நோட்டீசுகளை தம் கட்டை விரலால் எச்சிலை தொட்டு விநியோகம் செய்கின்றனர். இதனால், பாஜகவின் நேரடிப் பிரச்சாரம் என்பது உத்தரப்பிரதேசத்தில் கரோனாவை பரப்புவது என்றாகி விட்டது. நாம் கரோனாவில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுடன் பிரச்சாரம் செய்தாலும், எங்கள் மீது வழக்குகள் பதிவாகி விடும்.பிறகு நாம் மற்றகட்ட தேர்தலில் எந்தப் பணியும் செய்ய முடியாது. இதற்கு அஞ்சியே நாம் நேரடி பிரச்சாரம் செய்யத் துவங்கவில்லை ” என்று கூறுகிறார்.

அகிலேஷ் யாதவ்வை போன்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் நேரடி தேர்தல் பிரச்சாரத்திலிருந்து விலகி இருக்கிறார்.

பிரியங்கா நேரடிப் பிரச்சாரம்

இதனிடையே, காங்கிரஸின் உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பொறுப்பாளரான பிரியங்கா வத்ரா, நேற்று நொய்டாவின் செக்டர் 26 - இல் உள்ள காளி கோயிலில் சிறப்பு பூசை செய்த பின் முதன்முறையாக நேரடிப் பிரச்சாரம் துவங்கி உள்ளார்.

பாஜக மீது முதல் வழக்கு

நொய்டாவின் செக்டர் 63 -ன்இல் போஜ்புரி நடிகரும் பாஜகவின் எம்.பியுமான ரவிகிஷண் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் மீது கரோனா பரவலில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குகள் பதிவாகி உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x