Published : 21 Jan 2022 07:18 AM
Last Updated : 21 Jan 2022 07:18 AM

இன்று நாம் உருவாக்கி இருக்கும் நிர்வாக முறையில் - பாகுபாட்டுக்கு இடம் இல்லை: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

புதுடெல்லி: இன்று நாம் உருவாக்கியிருக்கும் நிர்வாக முறையில் பாகுபாட்டுக்கு இடமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டு விழாவில் இருந்து பொற்கால இந்தியாவை நோக்கி என்பது குறித்த தேசிய விழாவை பிரதமர் நரேந்திர நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைமை அலுவலகத்திலும் சுதந்திர தின கொண்டாட்டத்தை பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம், இயற்கை வேளாண்மை திட்டம் உட்பட பிரம்ம குமாரிகள் அமைப்பின் 7 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:

இந்தியாவில் பெண்களை தெய்வமாகப் போற்றுகிறோம். பாஜக ஆட்சியில் ராணுவத்தில் பாலின பாகுபாடு அகற்றப்பட்டு பெண்களுக்கும் சமஉரிமை வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிக பெண் எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது மத்தியஅரசின் முக்கிய அமைச்சரவைகளை பெண்கள் நிர்வகிக்கின்றனர். சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது.

பொற்கால இந்தியாவை உருவாக்க கோடிக்கணக்கான இந்தியர்கள் அடிக்கல் நாட்டினர். அவர்களின் உழைப்பின் பலனை நாம் அனுபவித்து வருகிறோம். நம்மால் நாடு வாழ்கிறது. நாட்டின் மூலம் நாம் வாழ்கிறோம். நாட்டில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விஷயத்திலும் அனைவரின் முயற்சியும் அடங்கியிருக்கிறது. ‘அனைவரும் இணைவோம்,அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி' என்பது நாட்டின் வழிகாட்டும் குறிக்கோளாக மாறியிருக்கிறது. இன்று நாம் உருவாக்கியிருக்கும் நிர்வாக முறையில் பாகுபாட்டுக்கு இடமில்லை, நாம் கட்டமைக்கும் சமூகம் சமத்துவம், சமூக நீதி என்ற அடித்தளத்தின் மீது உறுதியாக நிற்கிறது.

நமது கலாச்சாரத்தை நமது நாகரிகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க நமது ஆன்மீகம், நமதுபன்முகத் தன்மையை பாதுகாக்க வேண்டும். அதேநேரம் தொழில்நுட்பம், அடிப்படைக் கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றைத் தொடர்ந்து நவீனமாக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x