Published : 16 Jan 2022 09:04 AM
Last Updated : 16 Jan 2022 09:04 AM

பெண்ணின் நகையை கணவர் வீட்டார் பாதுகாப்பாக வைத்திருப்பதை வரதட்சணை கொடுமையாகக் கருத முடியாது: என்ஆர்ஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி

குடும்ப உறுப்பினரின் நகையை பாதுகாப்பாக வைத்திருக்க மேற்கொள்ளும் நடவடிக்கையை வரதட்சணை கொடுமையாகக் கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

ஒரு பெண் தனது கணவர், அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது வரதட்சணை கொடுமை செய்ததாக வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சம்பந்தப்பட்ட நபர்கள் வெளிநாடு செல்ல தடை விதிப்பதாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

வெளிநாடுவாழ் இந்தியப் பெண் ஒருவர் தனது கணவர் வீட்டு உறுப்பினர்கள் மீது தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இதற்காக அவர்களை வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது என்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. அதேசமயம் நீதிமன்ற அனுமதியுடன் வெளிநாடு செல்லலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஜேகே மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் சம்பந்தப்பட்ட நபர் மீது புகார் சுமத்த போதிய முகாந்திரம் இல்லை என்றும், இது வழக்கமாக குடும்ப நபர்கள் ஒருவருக்கொருவர் சுமத்தும் குற்றச்சாட்டு என்றும் இது தவறான பரிந்துரை, புரிதல், உண்மைகளை மறைப்பதால் ஏற்படும் பிரச்சினை என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுஉள்ளனர்.

வரதட்சணை கேட்டு துன்புறுத்தினார் என்று எந்த சந்தர்ப்பத்திலும் புகார் ஏதும் எழவில்லை. ஒரு இளைஞர் சுதந்திரமாக வாழ்வதை அவரது உறவினர்கள் தட்டிக் கேட்கவில்லை என்பதை குற்றமாகக் கருத முடியாது. அவருக்கு அறிவுரை கூறாததையும் தவறாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய நிகழ்வுகள் இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் 498ஏ பிரிவின் கீழ்(வரதட்சணை கொடுமை) வராதுஎன்றும் தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

புகார் அளித்துள்ள நபரின் மாமியார் மற்றும் மைத்துனர் எந்த அளவுக்கு நகைகளை எடுத்துச் சென்றனர் என்பது குறித்த விவரம் ஏதும் இல்லை. அவர்கள் நகைகளை பதுக்கி வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டும் இல்லை. அதேசமயம் சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து பெறப்பட்ட நகைகளை அவர் கேட்கும்போது தர மறுத்ததாக எவ்வித குற்றச்சாட்டும் பதிவாகவில்லை. நகைகளை பாதுகாப்பு கருதி பத்திரமாக வைத்திருப்பதை தவறான நடவடிக்கையாகக் கருத முடியாது என்றும் இது பிரிவு 498ஏ-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக கருத முடியாது என்றும் தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

வழக்கு பதிவு செய்த பெண் மற்றும் அவரது கணவரை நீதிமன்றம் கண்டித்ததோடு அவர்கள இருவரும் இந்த விஷயத்தில் சமரசமாக செல்லும்படியும் அறிவுறுத்தியது. கணவரின் சகோதரர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஆதாரமற்றது. ஏனெனில் இருவரும் வேறு வேறு இடங்களில் வசிக்கின்றனர்.

குற்றம் சாட்டப்பட்ட நபரின் சகோதரர் வடக்கு கரோலினாவில் வசிக்கிறார். புகார்அளித்தவரின் கணவர் டெக்ஸாஸில் வசிக்கிறார். இருவரும் ஒரே இடத்தில் வசிக்கவில்லை என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டி யுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x